சென்னை: தமிழகத்தில் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதுதொடர்பாக தொடர்புடைய அதிகாரிகள் நாளைக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோராக்கும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, மத்திய அரசும் நமஸ்தே திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கும் முக்கிய பங்கு உள்ளது. இந்த முறைகேடுகளை நான் அம்பலப்படுத்தியதால் தூய்மைப் பணியாளர் சீருடையில் வந்த சில சமூகவிரோதிகள் எனது வீட்டில் கழிவுநீரைக் கொட்டி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை செயலர், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத் தலைவர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள் இதுதொடர்பாக நாளை (மே 16) பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த திட்டம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.