சென்னை: மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழக ஆளுநர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்த அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் குடியரசுத் தலைவரின் கடிதத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்களின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பாஜகவின் கட்டளைப்படி தமிழக ஆளுநர் செயல்பட்டார் என்பதை இந்த முயற்சி தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம் பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சி இது. இது சட்டத்தின் மகத்துவத்தையும் அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளரான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் நேரடியாக இக்கடிதம் சவால் செய்கிறது.
>> ஆளுநர்கள் செயல்படுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் ஏன் எந்த ஆட்சேபனையும் இருக்க வேண்டும்?
>> மசோதா ஒப்புதலில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் தடையை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறதா?
>> பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?
நமது நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்தக் குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசியலமைப்பின் அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே, இது மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்க இந்த சட்டப் போராட்டத்தில் இணையுமாறு அனைத்து பாஜக அல்லாத மாநிலங்களையும் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் போரில் நாம் நமது முழு பலத்துடன் போராடுவோம். தமிழ்நாடு போராடும்-தமிழ்நாடு வெற்றி பெறும்!’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.
I strongly condemn the Union Government’s Presidential reference, which attempts to subvert the Constitutional position already settled by the Hon’ble Supreme Court in the Tamil Nadu Governor’s case and other precedents.
This attempt clearly exposes the fact that the Tamil Nadu…
— M.K.Stalin (@mkstalin) May 15, 2025