புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் நேற்று பதவியேற்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான பி.ஆர்.கவாய் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி பதவிக் காலம் முடிவடையும் வரை சுமார் 6 மாதங்களுக்கு இவர் தலைமை நீதிபதியாக இருப்பார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் கடந்த 1960-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி கவாய் பிறந்தார். 1985-ல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இணைந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார்.
கடந்த 1992-ல் உதவி அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு ஓராண்டு பணியாற்றினார். பிறகு 2000-ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2003 நவம்பரில் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 2005-ல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். 2019-ம் ஆண்டு மே 24-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் இரண்டாவது நபர் பி.ஆர்.கவாய் ஆவார். மேலும் நாட்டின் நீதித்துறைக்கு தலைமை வகிக்கும் முதல் பவுத்தர் இவர் ஆவார்.
பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் பி.ஆர்.கவாய் இடம்பெற்றுளார். ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளளை கவாய் தலைமையிலான அமர்வு விடுவித்தது. வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்த அமர்வில் கவாய் இடம்பெற்றிருந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தும் தேர்தல் பத்திரம் செல்லாது என்றும் தீர்ப்பளித்த அமர்வில் கவாய் அங்கம் வகித்துள்ளார்.