புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்துக்கான கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ரங்கசாமி முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி வேண்டும் என உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பல கட்டங்களாக போராடி வருகின்றன.
புதுச்சேரிக்கு தனி மாநிலத் தகுதி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த இரண்டு சட்டமன்ற கூட்டத் தொடரிலும் 15 மற்றும் 16-வது முறையாக ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீரமானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு தனி மாநிலத் தகுதி வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் மாநில அரசு கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வரும் 27-ல், தலைநகர் புதுடெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாநிலத் தகுதிக்காக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதாவது புதுச்சேரி, காரைக்கால் மக்களிடம் மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமும் கையெழுத்து பெறுவது என்றும், அக்கையெழுத்து மனுவை டெல்லி சென்று மத்திய அரசிடம் ஒப்படைப்பது என்றும் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த கையெழுத்து இயக்கத்தை இன்று மதியம் சட்டப்பேரவை வளாகத்திலுள்ள முதல்வர் அலுவலகத்தில், முதல்வர் ரங்கசாமி மனுவில் முதல் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்.
மேலும் இக்கையெழுத்து இயக்கத்தில் அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவது எனத் திட்டமிட்டுள்ளனர்.