பொதுவாகத் தேர்வு, தேர்வு முடிவுகள் குறித்த பயம் பள்ளி மாணவர்களுக்கு இருப்பது வழக்கம். பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரித் தேர்வுகளைப் பெரும்பாலானோர் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள். ஆனால், போட்டித் தேர்வு, ஒரு படிப்பில் சேர்வதற்கான சிறப்புத் தேர்வு எனும்போது அதற்குத் தயாராகத் தொடங்குவது முதல் தேர்வை எதிர்கொண்டு வெற்றி காண்பதுவரை அதிக சவால் நிறைந்த பயணமாகவே இருக்கிறது.
வெற்றிக்கான முதலீடு: போட்டித் தேர்வை எழுத விரும்பும் மாணவர் ஒருவர், அதற்காக அதிக நேரத்தை முதலில் முதலீடு செய்ய வேண்டி வரும். அதிக உழைப்பும் பயிற்சியும் அவசியம். சுயமாகத் தயாராக முடியாதபட்சத்தில், பயிற்சிக்காகப் பணத்தையும் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்தக் காரணங்களாலும், அதிகப் போட்டி நிறைந்ததாக இருக்கும் என்பதாலும் பள்ளி, கல்லூரித் தேர்வுகளைவிட இது சற்று வேறுபட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் போட்டித் தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடிப்படையாகக் கொண்டது. அதற்கென நேரமும் உழைப்பும் முதலீடு செய்யப்படும்போது தேர்ச்சி பெற்று இலக்கை எட்டினால் மட்டுமே, அந்த முதலீடு பயன் அடைந்ததாகக் கருதப்படுகிறது. இல்லையென்றால் அது வீணடிக்கப்பட்டதாகவும் இழப்பாகவும் புரிந்துகொள்ளப்படுவதால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது.
தோல்வியின் காரணமாக ஒருவருக்கு எழும் கோபம் அல்லது வருத்தம் தன்மீது திரும்பும்போது அவருக்கு அளவு கடந்த மனப்பதற்றம் ஏற்படலாம். அது சில நேரத்தில் வாழ்க்கை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் தோன்றவும் காரணமாகிறது. போட்டித் தேர்வுக்காகப் போட்டியிடும் நபர்களைவிட, அவர்கள் போட்டியிடும் இடங்களுக்கான எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.
இதனால், முதல் கட்டத்திலேயே அனைவருக்கும் வெற்றி கிடைப்பது அரிது. உதாரணமாக யூபிஎஸ்சி, மருத்துவத் துறை தேர்வுகளுக்கு முயல்பவர்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள். ஆனால், அதற்கான இடங்கள் சில ஆயிரங்கள்தான் இருக்கும் என்கிற நிலையில் போட்டித் தேர்வுகள் என்பது திறனறித் தேர்வு என்பதைத் தாண்டி ஒரு வகையான ‘Filtering mechanism’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தவிர்க்க முடியும்: போட்டித் தேர்வுக்குத் தயாராகும் முன்பு கிடைப்பது வெற்றியோ தோல்வியோ, மேற்கண்ட அடிப்படைப் புரிதலை மனதில் வைத்துக்கொண்டால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இந்த முறை இல்லையென்றால் என்ன, மீண்டும் ஒரு முறை முயன்று பார்ப்போமே என நினைக்க வேண்டும்.
இல்லையெனில் வேறு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர், சுற்றத்தினர் தன்மீது வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டி ஒருவர் சுயமாகவே தனக்கு அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
போட்டித் தேர்வர்களுக்குச் சரியான நேர மேலாண்மை, குறைந்தது எட்டு மணி நேர உறக்கம், சத்தான உணவு, போதிய அளவு நீர் அருந்துதல், சிறிய அளவில் உடற்பயிற்சி, தசைத் தளர்வு பயிற்சி, மூச்சுப் பயிற்சி, குழுக் கலந்துரையாடல் ஆகியவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பது நல்லது.தேர்வு எழுதுவது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்காக முனையும்போது ஏற்படக்கூடிய ‘அழுத்தம்’ ஓர் உந்துசக்தியாகவும் அமையலாம்.
இது ‘Physiological stress’ என மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட அளவு வரையிலும் ஒருவரின் செயல்திறன் மேம்படுவதற்கு அல்லது கூடுவதற்கு இந்த அழுத்தம் பயன்படுகிறது. இதுவே ஒருவரின் செயல்திறனை முடக்கும் அளவிற்குத் தீவிரமான அழுத்தம் ஏற்பட்டால் ‘Distress’ எனப்படுகிறது.
இது உளவியல் நெருக்கடி என்கிற வகையில் மாறிவிடுகிறது. இவ்வாறு அளவுக்கு அதிகமாக அல்லது தீவிரமாக மன உளைச்சலின் தாக்கம் இருக்கும்போது, அதைக் கண்டறிந்து, மருத்துவரைச் சந்தித்து தேவையான மனநல ஆலோசனைகளைப் பெற வேண்டும். அதிலிருந்து மீண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(தொடர்ந்து பேசுவோம்)
– addlifetoyearz@gmail.com
போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அச்சத்தில் இருந்து மீள, தமிழ்நாடு அரசின் ‘நட்புடன் உங்களோடு’ மனநலச் சேவையின் 104 அல்லது 14416 என்கிற கட்டணமில்லாத் தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்புகொண்டு மனம்விட்டுப் பேசலாம். |