அரசியலில், விட்ட இடத்தை பிடிக்க நினைப்பவர்களும் அப்படி பிடிக்க நினைப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே ஓரங்கட்ட நினைப்பவர்களுமே இன்றைக்கு நிறைந்திருக்கிறார்கள். அதுதான் அரசியலுக்கான எழுதப்படாத இலக்கணமும் கூட. நாமக்கல் மாவட்ட திமுக-விலும் இரண்டு பேர் அந்த இலக்கணத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றுபட்ட நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் செ.காந்திச்செல்வன் தான் இருந்தார். ஸ்டாலினின் தீவிர விசுவாசியான இவர் மீது அதிருப்தி ஏற்பட்டதாலோ என்னவோ 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு நாமக்கல் மாவட்ட திமுக கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக காந்திச்செல்வன் அறிவிக்கப்பட்டார்.
என்ன நடந்ததோ தெரியவில்லை மிகச் சீக்கிரமே அப்பொறுப்பில் இருந்தும் காந்திச்செல்வன் நீக்கப்பட்டு அவரது ஆதரவாளரான கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பார்.இளங்கோவன் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரும் நீண்ட நாள் தாக்குப்பிடிக்கவில்லை. அவரையும் நீக்கிவிட்டு, கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்த கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக அறிவித்தது தலைமை. பிற்பாடு அவரே கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் ஆனார். உதயநிதியின் விசுவாசியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ராஜேஸ்குமாரிடம் மாநிலங்களவை உறுப்பினர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பதவிகளும் வரிசைகட்டி வந்து நின்றன.
இதையெல்லாம் தக்கவைத்துக் கொள்ள அரசியல் சாணக்கியத்தனத்துடன் சில பல காய்நகர்த்தல்களை ராஜேஸ்குமார் மேற்கொண்டார். அதிலொன்றாக, காந்திச்செல்வனின் விசுவாசிகளுக்கு பாரபட்சமில்லாமல் கட்சிப் பதவிகளை வாரி வழங்கியவர், உள்ளாட்சி தேர்தலிலும் அவர்களுக்கு தாராளமாக வாய்ப்பளித்து அவர்களை தனது விசுவாசிகளாக மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டார். காந்திச்செல்வனை தனிமரமாக்க வேண்டும் என்பதற்காகவே ராஜேஸ்குமார் இதையெல்லாம் கணக்குப் போட்டு கச்சிதமாக செய்து முடித்ததாகச் சொல்வார்கள்.
தனக்கெதிராக இப்படி எல்லாம் ‘வேலைகள்’ நடப்பதை உள்வாங்கிய காந்திச்செல்வன், சரிக்குச் சரியாக நின்று போராட விரும்பாமல் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்க்க ஆரம்பித்தார். எதிரணியும் அவருக்கு முறைப்படி அழைப்புகள் அனுப்பக்கூட பல நேரங்களில் வாகாக மறந்துபோனது.
இந்தச் சூழலில் சட்டப் பேரவை தேர்தலுக்காக 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நாமக்கல் மாவட்டத்தை கட்சி ரீதியாக மூன்றாக பிரிக்க தலைமை திட்டமிடுவதாக செய்திகள் அடிபடுகிறது. அப்படி பிரித்தால் புதிய மாவட்டத்துக்கு காந்திச்செல்வன் மீண்டும் செயலாளராக்கப்படலாம் என்றும், இதை மனதில் வைத்து அவர் தனக்கான ஆதரவு வட்டத்தைப் புதுப்பித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் முரசொலியில் காந்திச்செல்வன் முழுபக்க விளம்பரம் கொடுத்திருந்தது இந்தச் செய்திகளுக்கு வலு சேர்ப்பதாகவும் இருந்தது. காந்திச்செல்வன் மீண்டும் கட்சிக்குள் ஆதவு திரட்டுவதை அறிந்த ராஜேஸ்குமார், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், “நான் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு எல்லாம் அச்சமாட்டேன்” என்ற தொனியில் பேசியதும் பரபரப்பான பேச்சானது.
இதனிடையே ஏப்ரல் 30-ம் தேதி காந்திச்செல்வனின் மகன் கவுதமின் திருமணம் நாமக்கல்லில் நடந்தது. திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர். பகை வருமோ எனப் பயந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக-வினர் பலரும் போவதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த நிலையில், முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் திருமணத்தன்றும் ராஜேஸ்குமார் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டார். கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பத்திரிகை விளம்பரமும் படபடத்தது.
இந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவு ஒன்றை போட்டிருந்த ராஜேஸ்குமார், காந்திச்செல்வனுக்கு சால்வை அணிவிக்கும் போட்டோவையும் அதனுடன் இணைத்திருந்தார். இதைப் பார்த்துவிட்டு, நாமெல்லாம் போறதா வேண்டாமான்னு நினைச்சுக்கிட்டு இருக்கையில இவரு ஓவரா சீன் போட்டிருக்கிறாரே என கிழக்கு மாவட்ட திமுக-வினர் தங்களுக்குள் குமைந்திருக்கிறார்கள்.
இதனிடையே, ராஜேஸ்குமாரின் பதிவை விமர்ச்சிக்கும் விதமாக நாமக்கல் துணை மேயர் செ.பூபதி முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு எங்கிருந்து எப்படி ரியாக் ஷன் வந்ததோ தெரியவில்லை. உடனே அந்தப் பதிவை நீக்கிவிட்டு ராஜேஸ்குமாருக்கு ஜே போடும் விதமாக புதிதாக இன்னொரு பதிவை போட்டு எஸ்கேப் ஆனார் பூபதி.
ஆனால், அதற்குள்ளாக திமுக-வினர் இந்த இரண்டு பதிவுகளையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துவிட்டனர். அந்தப் பதிவுகளை நாம் பூபதிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தோம். உடனே போனில் பேசிய பூபதி, “நான் தான் முதலில் போட்ட கருத்தை டெலிட் செய்துவிட்டேனே… அதையெல்லாம் எதற்காக ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறீர்கள்?” என்று சிடுசிடுத்தார்.
அனைத்தையும் தலைமை பார்த்துக் கொள்ளும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு அண்மையில் அறிவுறுத்தி இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், நாமக்கல் திமுக-வில் நடப்பதை எல்லாம் அறியாமலா இருப்பார்?