கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்த வழக்கில் 376டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)என் (தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை புரிதல்) ஆகிய பிரிவுகளில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ முயற்சி வீண் போகவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்கள், வழக்கின் தன்மை, பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் நியாயமானத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் அழிக்கப்பட்ட சில மின்னணு ஆவணங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களால் மீட்டெடுக்கப்பட்டன. சாட்சிகள் சிபிஐ தனிக் குழுக்கள் மூலம் ரகசியமாக விசாரிக்கப்பட்டனர்.உயர்நீதிமன்ற உத்தரவின்படி 8 வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்பட்டன. வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சியங்களில் யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை.
விஞ்ஞானபூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்டவற்றுக்கு தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் மகேந்திர சாவ்லா மற்றும் நிர்பயா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளை முன்னுதாரணமாக காட்டி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு சென்றாலும் தண்டனை நிலைநிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆதாரங்கள் திருப்தி… கோவை மகளிர் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் ஜிஷா கூறும்போது, “சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றம் திருப்திகரமாக ஏற்றுக்கொண்டது. நீண்ட விசாரணை என்பது தவறானது. 2019-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒருவர்கூட பிறழ் சாட்சி அளிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியே தெரியாமல் பாதுகாக்கப்பட்டது. சிபிஐ சிறப்பாக விசாரணை நடத்தியது” என்றார்.
மேல்முறையீடு செய்வோம்… எதிர்தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜ் கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்களின் வயது, உடல்நிலை, அவர்களது வயதான பெற்றோர் போன்றவற்றை குறிப்பிட்டு, தண்டனையை குறைக்க வலியுறுத்தினோம். நேரடி சாட்சிகள் எதுவும் இல்லை என்றும் வலியுறுத்தினோம்.
கைதானவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லை, முக்கியக் குற்றவாளிகளை தப்ப விட்டுள்ளனர் உள்ளிட்டவற்றையும் தெரிவித்தோம். தீர்ப்பின் நகலைப் படித்துவிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்றார்.