ஹைதராபாத்: பிரமோஸ், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகளின் பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் விரைந்து விநியோகம் செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரில் தரை வழி தாக்குதலை விட வான் வழி தாக்குதல்களான ஏவுகணை தாக்குதல் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்தான் அதிகளவில் இருந்தது. பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழிக்க இந்தியாவும் அதிகளவிலான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பயன்படுத்தியது.
அதேபோல் பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் ஸ்கால்ப், ஹேமர், ஸ்பைஸ் 2000 ஏவுகணைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. அதேபோல் ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு ட்ரோன்கள் ஆகியவையும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.
போரில் அதிகளவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதால், ஆயுத கையிருப்பை மீண்டும் நிரப்ப ஏவுகணைகளையும், ட்ரோன்களை விரைந்து கொள்முதல் செய்ய அனைத்து ராணுவ கமாண்டர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகள், ஏவுகணைகளின் பாகங்கள், ட்ரோன்களை தயாரிக்கும் டிஆர்டிஓ, பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், அதானி எல்பிட் அன்வான்ஸ்ட் சிஸ்டம், எம்டிஏஆர் டெக்னாலஜிஸ், அஸ்த்ரா மைக்ரோவே, ஆனந்த் டெக்னாலஜிஸ், ரகு வம்ஸி, ஜென் டெக்னாலஜிஸ், எஸ்இசி இன்டஸ்ட்ரீஸ், உட்பட பல நிறுவனங்கள் ஐதராபாத்தில் உள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை விரைந்து விநியோகம் செய்யும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வழக்கமாக ராணுவ தளவாடங்களை விநியோகம் செய்ய 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகும். ஆனால் தற்போது இவற்றை வாரந்தோறும் விநியோகம் செய்யும்படி ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
வரும் காலங்களில் தரைவழி தாக்குதலைவிட வான்வழி தாக்குதல்கள்தான் அதிகளவில் இருக்கும் என்பதை தற்போதைய போர் உணர்த்தியுள்ளது. அதனால் வான் தாக்குதல் மற்றும் வான் பாதுகாப்புக்கு தேவையான ஆயுதங்களை விரைந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.