ராமேசுவரம்: ‘வெசாக்’ தினத்தையொட்டி இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 9 தமிழக மீனவர்கள் இன்று (மே 13) விடுதலை செய்யப்பட்டனர்.
புத்த பெருமான் பிறந்தது, ஞானமடைந்தது மற்றும் இறந்தது என மூன்று முக்கிய நிகழ்வுகளும் ‘வெசாக்’ மாத பவுர்ணமி நாளிலேயே நிகழ்ந்தது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கையில் பவுத்த மக்கள் ‘வெசாக்’ மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தை ‘வெசாக்’ பண்டிகையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த தினத்தை முன்னிட்டு சிறிய குற்றங்கள் மற்றும், அபாராத தொகையைச் செலுத்த தவறியதற்காக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் இலங்கை கொழும்பு வெளிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யபட்ட மீனவர்கள் கொழும்பு மெருஹானாவில் உள்ள குடியேற்ற தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீனவர்கள் ஒரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.