திண்டுக்கல்: “புகார் கொடுப்பவர்கள் பெயர், விபரங்களை ரகசியமாக வைத்து உரிய நீதியை பெற்றுக்கொடுப்போம், என்ற அணுகுமுறை விசாரணையில் இருந்துள்ளது வரவேற்கத்தக்கது,” என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இந்து தமிழ் திசை நாளிதழக்கு, மா.கம்யூ., கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பாலபாரதி அளித்த பேட்டியில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கு மிக முக்கியமான வழக்கு. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் வரமுடியவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் புகார் கொடுத்தாலும் போலீஸ் நிலையத்தில் புகாரை வாங்க முன்வராதநிலை இருந்தது. இந்த சூழ்நிலையில், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதைதொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி, சிபிஐ விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து எந்த தகவலும் வெளிவராமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது.பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை துணிச்சலுடன் புகார் கொடுப்பவர்கள் பெயர், விபரங்கள் தெரியாது. அதை ரகசியமாக வைத்து உரிய நீதியை பெற்றுக்கொடுப்போம் என்ற அணுகுமுறை விசாரணையில் இருந்துள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும், இதுபோன்ற வழக்குகளை கையாளவேண்டும். இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனை கடுமையான தண்டனை தான். என்கவுன்ட்டர், மரண தண்டனை என்று இல்லாமல் வாழ்நாள் சிறை தண்டனை கொடுத்துள்ளனர். இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. போராட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதியை பெற்றுத்தரமுடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது,.” என்றார்.