கரோனா தொற்றுக்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் மோதல் புலம்பெயர்ந்தோரின் துயரங்களை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு மற்றும் பாதுகாப்புக்காக போராடுகிறார்கள். இது தொடர்பாக, ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவரின் அனுபவப் பகிர்வை காண்போம்.
பஞ்சாபின் மிகப் பெரிய தொழில் துறை மையமான லூதியானாவில் உள்ள ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி, இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது, அதாவது நான்கு நாட்களில் தன்னுடைய குடும்பம் மேற்கொண்ட துயரமான அனுபவத்தை விவரித்தார். லூதியானா நகரத்தில் அவசர நிலை ஏற்பட்டால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்த பயம், அவர்களின் குடும்பத்தை ஆட்கொண்டதாக கூறினார். அவரது சொந்த மாநிலமான ஒடிசாவிலிருந்து சுமார் 2,000 கி.மீ தூரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 50 வயதான இவர், தனது மனைவி மற்றும் 14 வயது மகனுடன் லூதியானாவில் வசித்து வருகிறார். “நாங்கள் நான்கு நாட்களாக பீதியில் இருந்தோம். எங்கள் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து நான் கவலைப்பட்டேன். மோதல் தொடர்ந்திருந்தால், இங்கு வாழ்வதே எங்களுக்கு கடினமாகி இருக்கும்,” என்று அவர் கூறினார்.
பஞ்சாப் மற்றும் ஜம்மு – காஷ்மீரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த மோதலில் மிகவும் பாதிக்கப்பட்டனர். குண்டுச் சத்தங்களும், சைரன் ஒலிகளும் அவர்களில் காதுகளை பதம் பார்த்தது. பொதுவாகவே போர், இயற்கை பேரிடர்கள், மற்றும் பிற அவசரநிலைகளின் போது அதிகம் பாதிக்கப்படுவது புலம்பெயர்ந்த தொழிலாளிகள் தான்.
மேலும், தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், “ஒடிசாவில் உள்ள எங்களது குடும்பத்தினர், எங்களை அங்கு வந்துவிடுமாறு அறிவுறுத்தினார்கள், ஆனால் நாங்கள் இந்த குறுகிய நேரத்தில் செல்வது கடினம் என்பதால் செல்லவில்லை. ரயில் நிலையத்துக்கு சென்றபோது, அங்கு மக்கள் சாரை சாரையாக முண்டியடித்து கொண்டு சென்றனர். மோதலின் முதல் நாளிலேயே பெரும்பாலானோர், வெளியேறத் தொடங்கினர்.
உத்தரப் பிரதேசம், பிஹார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கினர். ஆனால், எங்களுக்கு, இது ஒரு நீண்ட மற்றும் ஆபத்தான பயணம். பகலில், சாலைகளில் சில மக்கள் நடமாட்டத்தைக் காண முடிந்தது. ஆனால் இரவில், லூதியானாவில் மின்தடை ஏற்பட்டது.
இரவு நேரங்களில் ஒருவித பயம் எங்களை ஆட்கொண்டது. உடனடியாக இவ்விடத்தை விட்டு, வெளியேற வேண்டும் என்ற உந்துதல் இருந்தது, ஆனால் நாங்கள் யாரின் உதவியும் கிடைக்கப் பெறாமல் நிர்கதியாய் நின்றோம். பெரும்பாலான கடைகளில் மளிகை பொருட்கள் இல்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை மிக அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்றார்.
காஷ்மீரில் உள்ள இந்திய தொழிற்சங்க மையத்தின் தலைவரான அப்துல் ரஷீத் நஜர் கூறுகையில், “பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உள்ளூர் மக்களின் உதவியுடன் தங்கியிருந்தனர். இந்த நான்கு நாட்களில் உள்ளூர் மக்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 10 சதவீத தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர். ஆனால், அரசாங்கத்திடமிருந்து எந்த ஆதரவும் இல்லை” என்று கூறினார்.
பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு கட்டுமானம், விவசாயம், ஆடை சார்ந்த நிறுவனங்கள், உணவகங்களில் வேலை செய்யச் செல்வதாக தொழிலாளர் ஆர்வலர் தர்மேந்திர குமார் கூறினார்.
எம்.டி.ஐ குர்கானின் துணைப் பேராசிரியரும், தொழிலாளர் பொருளாதார நிபுணருமாண கே.ஆர்.ஷ்யாம் சுந்தர் கூறுகையில், “நெருக்கடியின் போது அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும். 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கோவிட்-19-இன் போது அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். எந்தவொரு உள்ளூர் அல்லது உலகளாவிய மோதலிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.
அவர்கள், தங்கள் பாதுகாப்பு, உணவு உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் குறித்து தொடர்ந்து கவலைப்படுகிறார்கள். முஸ்லிம் புலம்பெயர்ந்தோரை பொறுத்தவரை, அவர்கள் வகுப்புவாத வெறுப்பு காரணமாக கூடுதல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சில நேரங்களில், புலம்பெயர்ந்தோருக்கும், பூர்வகுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்படலாம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நெருக்கடியின்போது பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும்” என்றார்.