புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்திய போது, திருமணங்களில் வீடியோ எடுக்க பயன்படும் ட்ரோன்கள், பயனற்ற ஆயுதங்கள், திறனற்ற ஏவுகணைகளை இந்தியா மீது பாகிஸ்தான் ஏவியதாக சமூக வலைதளங்களும் உருது நாளிதழ்களும் விமர்சனம் செய்துள்ளன.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய போது, பாகிஸ்தான் பதிலுக்கு ஏவிய திறனற்ற ஏவுகணைகள் இலக்கை தாக்குவதற்கு முன்பாகவே வெடித்து சிதறியுள்ளன. இதுபோல், பயனற்ற ஆயுதங்களை வைத்து இந்தியாவுடன் திறமையாகப் போர் புரிவதாக நாட்டு மக்களை பாகிஸ்தான் ஏமாற்றி சமாளித்ததாக உருது நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்குள்ளேயே விழுந்து சிதறிய ஏவுகணை படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘‘நல்லவேளையாக போர் நிறுத்த அறிவிப்பால் பாகிஸ்தான் ராணுவம் தப்பியது. இந்தியாவை தாக்க பயன்படுத்திய அனைத்து ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் தோல்வி பாகிஸ்தானின் உண்மையான முகத்தை காட்டுகின்றன’’ என்று சமூக வலைதள பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், ‘‘இங்கும் அங்கும் விழுந்த ஏவுகணைகளில் இருந்து புகையோ அல்லது வெடிப்போ இல்லை. இது பாகிஸ்தான் ராணுவத்தின் அனுபவமின்மையையும் அம்பலப்படுத்தியது. இதுதான், பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய நிலை’’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் இந்தியாவின் 36 ராணுவ தளங்களை குறி வைத்து பாகிஸ்தான் 300 முதல் 400 ட்ரோன்களை அனுப்பியது. ஆனால், அவை அனைத்தையும் இந்திய ராணுவம் மிக எளிதாக சுட்டு வீழ்த்தியது. அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியா மீது ஏவிய அனைத்து ட்ரோன்களும் துருக்கியின் ஆசிஸ்கார்ட் சோங்கர் ட்ரோன் என்பது தெரியவந்தது.
இந்த ட்ரோன்களில் பெரும்பாலானவை திருமணங்களில் வீடியோ எடுக்க பயன்படுத்தப்படுவது போலஇருந்ததாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதைப் பார்த்த பாகிஸ்தானியர்கள், தங்கள் நாட்டு ராணுவத்தின் மீது மிகவும் கோபமடைந்தனர்.
கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தான் நடத்திய சோதனையின் போது ஒரு குறுகிய தூர ஏவுகணை விபத்துக்குள்ளாகி கிராமவாசிகள் சிலர் காயமடைந்தனர். அதேபோல் கடந்த 2024-ம் ஆண்டு சோதனையின் போதும், ஒரு ஏவுகணை இலக்கைத் தவறவிட்டு வானில் வெடித்து சிதறியது.
இவற்றின் மூலம் பாகிஸ்தானின் பெரும்பாலான ஆயுதங்கள் முற்றிலும் பயனற்றவை என்று அந்நாட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆயுதங்கள் தோல்வியடையும் போது, பொதுமக்களை ஈர்க்க ‘அல்லாஹு அக்பர்’ என பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஆன்மிக கோஷமிடும் டிக் டாக் வீடியோக்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். இதுபோன்ற நாடகத்தின் பின்னணியில் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.