சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 100 மினி பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சேவை வழங்கும் வகையில் மினி பேருந்து இயக்கத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடங்கியது.
தற்போது 146 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 22 பேருந்துகள் மெட்ரோ ரயில் பயணிகளின் சேவைக்காகவே பிரத்யேகமாக இயங்குகின்றன. இந்நிலையில் பேருந்து சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில் மேலும் 100 மினி பேருந்துகள் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜிபிஎஸ், பானிக் பட்டன், பார்க்கிங் கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ரூ.34 கோடி மதிப்பீட்டில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. ஜூன் 15-ம் தேதி முதல் புதிய விரிவான மினி பேருந்து சேவை அமலுக்கு வரும் நிலையில், அரசு மேலும் 100 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.