அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்வை அழகாய், அர்த்தமாய் மாற்றும் தாய்மார்களை போற்றுவோம் என வாழ்த்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை வடிவமைத்து வலிமை, இரக்கம் மற்றும் குணங்களைச் செதுக்கும் அமைதிச் சிற்பிகளான அனைத்து தாய்மார்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் தன்னலமற்ற அன்பின் மூலம் தலைமுறைகளை வரையறுத்து, வாழ்வின் திருப்புமுனைகளில் நம்மை வழிநடத்தும் அன்னையர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.
முதல்வர் ஸ்டாலின்: மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை அழகாய், அர்த்தமாய் மாற்றும் அன்னையரின் மகத்துவத்தை போற்றி, உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை உணவாக்கி உலகத்தை உனதென தந்த அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தியாகம், அன்பு, கருணை என தன்னிலிருந்து உருவான உயிரிடம் மட்டுமன்றி, தரணியில் இருக்கும் அனைத்து உயிர்களிடமும் தன்னிகரில்லாத அன்பைப் பொழியும் தாய்மார்களுக்கு என் மனம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உலகில் அன்னை தான் ஒவ்வொருவரும் காணும் முதல் தெய்வம். அன்பு, பாசம், அரவணைப்பு, தியாகம் ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் அன்னையர்களுக்கு அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தொடுவானத்தை எப்படி தொட முடியாதோ, அதேபோல் அன்னைக்கான நன்றிக்கடனையும் நம்மால் அடைக்கவே முடியாது. எனவே ஒவ்வொரு வினாடியும் அன்னையை வணங்கி நன்றிக் கடனை செலுத்திக்கொண்டே இருப்போம்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: அனைத்து தினமும் அன்னைக்கான தினமே. ‘பாலோடு பலத்தையும் ஊட்டி, துணியோடு துணிவையும் போர்த்தி’ வளர்த்த அன்னையருக்கு அன்னையர்தினம் சமர்ப்பணம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறு ஏது? தாய்மையை போற்றுவோம். தாய்மையை வணங்குவோம். தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
தவெக தலைவர் விஜய்: அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த கடவுளான அன்னையின் தூய அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
பாமக தலைவர் அன்புமணி: தம்மை அழித்து பிள்ளைகளுக்கு வெளிச்சமூட்டும் மெழுகுவர்த்தியாக அளவில்லாத அன்பை பரிமாறுபவள் தான் அம்மா. அவரின்றி இந்த உலகில் எதுவும் இல்லை. அன்னையர் தினத்தில் அவர்களது தியாகத்தைப் போற்றுவோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அன்பில் இணையற்றவர்களாக, பண்பில் நிகரற்றவர்களாக, பாசத்தில் ஈடற்றவர்களாக வாழும் தெய்வங்களான அன்னையர்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்குவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.