நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் முஸ்லிம்கள் தயாராக உள்ளனர் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைஸி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் உருது பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைஸி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இஸ்லாம் பெயரில் பாகிஸ்தான் நம் நாட்டில் மரண ஹோமம் நடத்தி வருகிறது. பஹல்காமில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் நம் நாட்டு ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. இதில் பாகிஸ்தான் பெரும் நஷ்டத்தை சந்திப்பது உறுதி. கடவுளின் கருணையால்தான் நாம் இந்தியாவில் பிறந்துள்ளோம். புனித மாதத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் எனும் பேதமின்றி அப்பாவி மக்களை கொல்லும் பாகிஸ்தானுக்கு இஸ்லாம் பெயரை சொல்லும் தகுதி கூட இல்லை. சிறுவர்களையும், அப்பாவிகளையும் கொல்லும்படி இஸ்லாம் எங்கும் கூறவில்லை. பொய்யின் வடிவம் பாகிஸ்தான். பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா பின்வாங்கக் கூடாது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக உள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் சாமானியர்களையும், அப்பாவி மக்களையும் கொலை செய்து வருகிறது. இதற்கு அவர்கள் கண்டிப்பாக தகுந்த தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அசாதுதீன் ஓவைஸி பேசினார்