கன்னியாகுமரி: தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மருதமலையில் 184 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம், திண்டலில் 180 அடி உயரத்திலும், இராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி திமிரியில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் அமைக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களில் கலந்து கொண்ட பி.கே.சேகர்பாபு, 1000 ஆண்டு பழமையான பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்ட சுவாமி திருக்கோயிலில் ரூ. 1.93 கோடி மதிப்பீட்டிலான 9 திருப்பணிகளையும், இரணியலில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்திடும் வகையிலான திருப்பணிகளையும், சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் சீரமைத்தல் மற்றும் கருங்கல் தரைதளம் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.கே.சேகர்பாபு, “பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு நீலகண்ட சுவாமி திருக்கோயிலில் ரூ. 1,93 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளையும், இரணியலில் அமைந்துள்ள மன்னர் காலத்து பொக்கிஷமான தொன்மை வாய்ந்த அரண்மனையை பாதுகாத்திடும் வகையில் ரூ.4.85 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளையும், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் சீரமைத்தல் மற்றும் கருங்கல் தரைதளம் அமைக்கின்ற பணியினையும் தொடங்கி வைத்துள்ளோம். அனைத்து பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.
இந்த ஆட்சியானது ஒரு ஆன்மீக ஆட்சி என்பதை நிரூபிக்கின்ற வகையில் கன்னியாகுமரியில் மென்மேலும் இது போன்ற திருப்பணிகளும், குடமுழுக்குகளும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும்.
தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மருதமலையில் 184 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம், திண்டலில் 180 அடி உயரத்திலும், இராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி திமிரியில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. முதல்வரின் அனுமதியை பெற்று, இப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரும் வகையில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் 19 திருக்கோயில்களில் ரூ. 1,770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருச்செந்தூரில் HCL நிறுவனத்தின் சார்பில் 200 கோடி ரூபாய்க்கு மேலாகவும், திருக்கோயில் சார்பில் 100 கோடி ரூபாய்க்கு மேலாகவும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முழுமையாக நிறைவு பெறுகின்ற போது பக்தர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற அளவிற்கு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திகழும்” என்று தெரிவித்தார்.