சென்னை: நாடு முழுவதும் இன்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின்: மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது. உண்மையில் இது கொண்டாட்டம் அல்ல. அன்னையர் நமக்கு அளித்த உயிர், அன்பு, கருணை, வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி சொல்வதற்கான உன்னத முயற்சி தான் அன்னையர் தினம்.
ஆனால், தொடுவானத்தை எப்படி தொட முடியாதோ, அதேபோல் அன்னைக்கான நன்றிக்கடனையும் நம்மால் அடைக்கவே முடியாது. அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனாலும், எப்படியாவது அதை சாதித்து விட மாட்டோமோ என்ற விடா முயற்சி தான் நம்மை அதை நோக்கி தள்ளுகிறது. அந்தக் கடனை நம்மால் தீர்க்க முடியாது. ஆகவே ஒவ்வொரு வினாடியும் அன்னையை வணங்கிக் கொண்டு, நன்றிக் கடன் செலுத்திக் கொண்டே இருப்போம். அன்னையர் வாழ்க!
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாழ்வியல் தத்துவத்தில் முதலிடம் வகிப்பதோடு, அதீத அன்புக்கும், அளவற்ற பாசத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாக திகழும் அன்னையர்களை போற்றிக் கொண்டாடும் அன்னையர்களின் தினம் இன்று..
தமிழக மக்களின் மகிழ்ச்சியே தனது லட்சியம் எனக்கூறி நாடுபோற்றும் நல்ல பல திட்டங்களை தாயுள்ளத்தோடு செயல்படுத்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் வளத்தையும், வசந்தத்தையும் ஏற்படுத்திய இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்நேரத்தில் நினைவுகூற நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
அன்பில் இணையற்றவர்களாக, பண்பில் நிகரற்றவர்களாக, பாசத்தில் ஈடற்றவர்களாக எத்தகைய சவால்களையும், சோதனைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வாழும் தெய்வங்களாக வலம் வரும் அன்னையர்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: அம்மா என்ற சொல்லுக்குத் தான் உலகில் எத்தனை அர்த்தங்கள்…. அன்பு, அர்ப்பணிப்பு, தியாகம், சகிப்புத்தன்மை, அயராத உழைப்பு, ஊக்கமளிப்பு, மகவுகளை சாதிக்கத் தூண்டும் சக்தி, பிள்ளைகள் சாதித்ததைக் கண்டு பெரிதுவக்கும் உறவு, தான் பசித்திருந்து பிள்ளைகளின் பசியாற்றும் பெருந்தன்மை, தம்மை அழித்து பிள்ளைகளுக்கு வெளிச்சமூட்டும் மெழுகுவர்த்தி என அம்மாவுக்கு ஆயிரமாயிரம் வரையறைகள் உண்டு.
ஆனால், இவை அனைத்திற்குள்ளும் அடங்காமல் புதிய, புதிய பரிமாணங்களை எடுத்து, அளவில்லாத அன்பை பரிமாறுபவள் தான் அம்மா. அவர்கள் இல்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை. உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்; அவர்களை என்றென்றும் வணங்குவோம்.