மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலிருந்து நேற்று மாலையில் புறப்பட்ட கள்ளழகருக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி தண்ணீர் பீய்ச்சி அடித்து பக்தர்கள் வரவேற்றனர்.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான நேற்று காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் மாலையில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் சுந்தரராஜபெருமாள், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் மாலை 6.15 மணியளவில் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கோயில் ராஜகோபுர வாசலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சந்நிதியில் தீபாராதனை நடந்தது.
கருப்பணசாமியின் உத்தரவு பெற்று மதுரைக்கு கள்ளழகர் மாலை 6.25 மணியளவில் புறப்பட்டார். பின்பு இரவில் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி பகுதியிலுள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி அப்பன்திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் தங்கினார். நான்காம் நாளான இன்று (மே 11) அதிகாலை 1 மணியளவில் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கடச்சனேந்தல் வழியாக மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடிக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் வந்தடைந்தார். கள்ளழகரை காண திரண்டிருந்த பல ஆயிரம் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கள்ளழகரை வரவேற்றனர்.
பின்னர் புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில், அம்பலகாரர் மண்டகப்படிகளிலும், தனியார் மண்டகபடிகளிலும் எழுந்தருளினார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்த கள்ளழகரை வரவேற்றனர். சாலையோரங்களில் நீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இன்று இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருள்கிறார். அங்கு திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொள்கிறார். நாளை மே 12-ம் தேதி அதிகாலை கோயிலிலிருந்து புறப்பாடாகி தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் 2.30 மணியளவில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார்.
அங்கிருந்து வைகை ஆறு நோக்கி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். வழிநெடுகிலும் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வரவேற்போடு, எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவ பெருமாளும் வெள்ளிக்குதிரை வாகனத்தில் வரவேற்க நாளை அதிகாலை 5.45 மணிமுதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
வைகை ஆற்றில் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி தந்துவிட்டு காலை 7.25 மணியளவில் வையாளியாகி வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றிவிட்டு அங்கிருந்து ராமராயர் மண்டகப்படிக்கு புறப்படுகிறார். அங்கு பக்தர்களின் தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்விப்பார்கள். இரவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார்.
நாளை மறுநாள் மே 13-ல் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும். மே 14-ல் ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். அங்கு மே 15-ல் அதிகாலையில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயிலில் சந்நிதியில் வையாளியாகி மலைக்கு திரும்புகிறார். மே 16-ல் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக காலை 10 மணியளவில் கோயிலை அடைகிறார். மே 17-ல் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.