இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை, முறைப்படி இந்தியா வெளியிடுவதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ளதீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடுமையாகத் தாக்கியது. பாகிஸ்தானின் பதில் தாக்குதலையும் தடுத்து நிறுத்தி, போரின் நாயகனாக இந்தியா திகழ்ந்தது. அடுத்தடுத்து இந்தியா நடத்திய ஆக்ரோஷத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பெரும் இழப்பைச் சந்தித்தது. இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல், உலக நாடுகள் மூலம் போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. தவறை உணர்ந்து பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு முயற்சிப்பதால் அதை ஏற்கும் மனநிலைக்கு இந்தியா வந்தது.
இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விட்டார். அமெரிக்க துணை அதிபர் மற்றும் அதிகாரிகளின் தொடர் முயற்சி காரணமாக இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டன. இதை இந்தியா ஆரோக்கியமாகப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. போரில் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்த இந்தியா, போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை முறைப்படி வெளியிட்டிருக்க வேண்டும் என்ற கருத்து இந்திய மக்களிடம் மேலோங்கி உள்ளது.
போர் நிறுத்தத்துக்கு உமர் அப்துல்லா வரவேற்பு: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார். அவர் கூறும்போது, “போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். அதேநேரத்தில், இந்த போர் நிறுத்த அறிவிப்பு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே வந்திருந்தால், நாம் கண்ட ரத்தக் களரியும், இழந்த விலைமதிப்பற்ற உயிர்களும் பாதுகாப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.