கோவை: 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற, கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று (மே 10) நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில், பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனாய சங்கமேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் நடப்பாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சங்கமேஸ்வர சுவாமி, அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.
தினமும் மாலை யானை வாகனம், கைலாச வாகனம், மூஷிக ரிஷப வெள்ளி மயில் வாகனங்கள் என பல்வேறு வாகனங்களில் சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 10) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், பிற தெய்வங்களுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் அகிலாண்டேஸ்வரி உடனமர் சங்கமேஸ்வர சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து சுவாமிக்கும், திருத்தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், காலை 10.40 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கோயில் எதிர்புறம் உள்ள திடலில் இருந்து காலை 10.40 மணிக்கு தொடங்கிய தேரோட்டம், கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி வழியாக என்.ஹெச் சாலை வழியாக மீண்டும் கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியை அடைந்து மதியம் 2.15 மணிக்கு நிலை வந்தது. தேருக்கு முன்னதாக, 300-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேத மந்திரங்களை ஓதியபடியும், கைலாச வாத்தியங்களை முழங்கியபடியும் சென்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரோட்ட நிகழ்வில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தின் ஒரு பகுதியாக, மதநல்லிணக்கத்தை உறுதிப்படுத்திடும் வகையில், இஸ்லாமிய மக்கள் சார்பில், தேரோட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிஸ்கட், குளிர்பானம் ஆகியவற்றை வழங்கினர். 32 ஆண்டுகளுக்கு பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி, சித்திரை பெருவிழா நாளன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.