இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கவசமான ‘ஆகாஷ்தீர்’, பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்கள் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் பரஸ்பரம் அதிதீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்திய ராணுவத்தின் ட்ரோன், ஏவுகணைகளை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது.
லடாக், காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய விமானப்படை தளங்களை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு சுமார் 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இவை அனைத்தும் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன.
இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: இஸ்ரேல் ராணுவம் சார்பில் உள்நாட்டு தயாரிப்பான ‘அயர்ன் டோம்’ மற்றும் அமெரிக்கதயாரிப்பான தாட் ஆகிய வான்வழி பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்ரேல் வான் எல்லைக்குள் எதிரிகளின் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள் நுழையும்போது இந்த வான்வழி பாதுகாப்பு கவசங்களில் இருந்து அதிநவீன ஏவுகணைகள் சீறிப் பாயும். இவை எதிரிகளின் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்கும்.
இஸ்ரேலுக்கு இணையாக இந்தியாவின் சார்பில் ‘ஆகாஷ்தீர்’ என்ற அதிநவீன வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ‘ஆகாஷ்தீர்’ அமைப்பை உருவாக்கி உள்ளது. இஸ்ரேலின் அயர்ன் டோம், தாட் வான்பாதுகாப்பு கவசங்களில் இருந்து இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்’ கவசம் முற்றிலும் வேறுபட்டது. அயர்ன் டோம், தாட் அமைப்புகள் தானாகவே ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தும். மிகச் சிறிய ட்ரோனை அழிக்க சக்திவாய்ந்த ஏவுகணைகள் சீறிப் பாயும். இது தேவையற்றது. மிகச் சிறிய ட்ரோன்களை அழிக்க செலவு குறைந்த லேசர் கருவிகளே போதுமானது.
இதை கருத்தில் கொண்டு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், அதிநவீன ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி இருக்கிறது. எல்லை பகுதிகளில் நிறுவப்பட்டிருக்கும் ரேடார்கள், சென்சார்கள், உளவு செயற்கைக்கோள்கள் ஆகியவற்றின் தகவல்கள் ‘ஆகாஷ்தீர்’ அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
இதன்மூலம் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள், ‘ஆகாஷ்தீர்’ வான்பாதுகாப்பு கவச அமைப்பில் பதிவாகும். எதிரியின் ஆயுதம் என்ன? அதற்கு எந்த வகையான ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என்பதை ‘ஆகாஷ்தீர்’ சில நொடிகளில் துல்லியமாக கணக்கிட்டு தகவல் அளிக்கும். இதன் அடிப்படையில் எஸ்400 கவச ஏவுகணைகள், பிரித்வி, ஏஏடி , ஆகாஷ் , எஸ்125 பெசோரா, ஸ்பைடர் கவச ஏவுகணைகள், 9கே33 ஓசா, 2கே12 ஃகப், பரக், கியூஆர்எஸ்ஏஎம், எஸ்200 உள்ளிட்ட ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் வான்வழி தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்படும்.
ராணுவ வாகனங்களில் ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவச கட்டமைப்புகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களில் அதிநவீன கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இங்கிருந்து ராணுவம், விமானப்படைக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ‘ஆகாஷ்தீர்’ வான் பாதுகாப்பு கவசத்துக்கான கட்டமைப்புகள் பொருத்தப்பட்ட 107 வாகனங்கள் எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் புதிதாக 348 வாகனங்கள் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளன.
கடந்த 8-ம் தேதி இரவு பாகிஸ்தான் விமானப் படையின் ஜேஎப்17 ரகத்தை சேர்ந்த இரு போர் விமானங்கள் இந்திய எல்லையை ஒட்டி பறந்தன. இரு போர் விமானங்கள் குறித்து ‘ஆகாஷ்தீர்’ எச்சரிக்கை செய்தது. உடனடியாக ஆகாஷ் ஏவுகணைகள் மூலம் இரு ஜே17 போர் விமானங்களும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதேபோல காஷ்மீர் முதல் ராஜஸ்தான் வரையிலான எல்லைக்குள் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்த 50-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை ‘ஆகாஷ்தீர்’ அடையாளம் காட்டியது. உடனடியாக அனைத்து பாகிஸ்தான் ட்ரோன்களும் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன. இவ்வாறு இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.