புதுடெல்லி: தீவிரவாதத்தை ஒழிக்க வாராணசி மசூதிகளில் தொழுகையில் சிறப்பு வேண்டுதல் இடம்பெற்றது. இது, பாகிஸ்தானுக்கான பதிலடியில் நாடு முழுவதிலும் தொடரும் ஒற்றுமையாகக் கருதப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவம், நாட்டையே உலுக்கியது. பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் அப்பாவி மக்களைத் தேர்ந்தெடுத்து குறிவைத்து தாக்கினர்.
இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக நாடு முழுவதும் கோபம் நிலவுகிறது. அதே நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டான நிகழ்வுகளும் பல இடங்களில் நடைபெறுகின்றன.
அதற்கு ஓர் உதாரணச் சம்பவம் உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி, கியான்வாபி மசூதி உள்ளது. ஜாமியா மசூதியான அதனுடன் சேர்த்து நகரின் அனைத்து மசூதிகளிலும் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுபோன்ற, வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகளில் நாடு அல்லது உலக அளவில் நடைபெறும் சம்பவங்கள் முக்கிய இடம்பெறுவது வழக்கம்.
இந்தவகையில், நேற்றைய சிறப்பு தொழுகையின் இறுதியில் அவர்களது இறைவனிடம் கேட்கப்பட்ட ‘துவா’ எனும் வேண்டுதலில் இருநாடுகளுக்கும் இடையிலானப் போர் இடம்பெற்றது.
இந்தத் தொழுகையில், பங்கேற்ற ஏராளமான முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டினர். இத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான எல்லைப் போரில் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கவும் துவா செய்திருந்தனர்.
இந்தத் தொழுகையை முடித்து வெளியே வந்த முஸ்லிம்கள், மசூதிக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, அனைவரும் ஒரே குரலில், தீவிரவாதத்துக்கு எதிராகப் பேசினர்.
இது குறித்து வாராணசி முஸ்லிம்கள் கூறுகையில், “தீவிரவாதத்துக்கு மதம் இல்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிக்கிறது.
இந்த நாடு எதிர்காலத்தில் பஹல்காம் போன்ற கொடூரச் செயலில் மீண்டும் ஈடுபடாத வகையில் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவது அவசியம். இதை தற்போது செய்து வரும் நம் நாட்டின் ராணுவம் தன் இலக்கில் வெற்றிபெற துவா செய்தோம்.” எனத் தெரிவித்தனர்.
வாராணசி ஜாமியா மசூதியின் இமாமான மவுலானா முகம்மது அர்ஷத் பேசும்போது, “முஸ்லிம்களாகிய நாங்கள் எந்த வகையான வன்முறை, வெறுப்பு மற்றும் பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம்.
இஸ்லாம் அமைதிக்கான மதம், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுடன் அதற்கு எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. பயங்கரவாதத்தைப் பரப்புபவர் இஸ்லாத்தின் எதிரிகள். அல்லாவின் தூதர் எப்போதும் அமைதி மற்றும் மனிதநேயத்தை போதித்தனர்.” எனத் தெரிவித்தார்
இதேபோல் வாராணாசியின் முஸ்லிம்களின் மற்றொரு பிரிவான ஷியா மசூதிகளிலும் சிறப்பு துவா செய்யப்பட்டது. உ.பி.யில் இதர சில நகரங்களில் மசூதிகளிலும் தீவிரவாதத்தை ஒழிக்கவும், பாகிஸ்தானுடனானப் போரில் இந்தியா வெற்றி பெறவும் வேண்டப்பட்டது.