காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவை சேர்ந்த இளம் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நேற்று முன்தினம் இரவு, இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த தாக்குதலில் ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், கல்லிதாண்டா பகுதியை சேர்ந்த முரளிநாயக்(25) எனும் இளம் ராணுவ வீரர், வீர மரணம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அதிகாலை அவரது குடும்பத்தாருக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்து அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதனர். இவரது தந்தை எம். ஸ்ரீராம், தாயார் ஜோதிபாய் ஆகியோர் மும்பையில் ஒரு கட்டுமான தொழில் நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். முரளி நாயக் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு 15 நாட்கள் விடுமுறை எடுத்து வீட்டுக்கு கடைசியாக வந்துள்ளார்.
இளம் ராணுவ வீரர் முரளிநாயக்கின் உடல் இன்று அவரது சொந்த கிராமத்துக்குக் கொண்டு வரப்பட உள்ளது. அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. தகவல் அறிந்ததும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசி மூலம் முரளி நாயக்கின் பெற்றோரை தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறினார்.
ஆந்திர அரசு சார்பில் குடும்பத்துக்கு நல திட்ட உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார். மேலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை நேற்று அமைச்சர் சவீதா, முரளி நாயக்கின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.