திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டாடப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மகளிர் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, தகுதியுள்ள இன்னும் பலருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வரும் நிதியமைச்சரும் உத்தரவாதம் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஆண்கள் பெயரிலும், அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விதிகளுக்குப் புறம்பாக மகளிர் உரிமைத் தொகை பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 1 கோடியே 14 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு தற்போது மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படுகிறது. அதேசமயம் இதற்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 57 லட்சம் பேரது மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்தது. அப்படி முறையீடு செய்தவர்களுக்கு இதுவரை உரிமைத் தொகை கிடைத்தபாடில்லை.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும், சொந்தமாக 10 ஏக்கருக்கு மேல் வறண்ட நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேல் ஈர நிலம் இருக்கக் கூடாது, மின்சார பயன்பாடு ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்குள் இருக்கவேண்டும், 4 சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது, குடும்பத்தில் உள்ள யாரும் அரசின் ஓய்வூதியங்களை பெறுபவராக இருக்கக் கூடாது, ஊராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் யாரும் இதில் பயனடைய முடியாது என மகளிர் உரிமைத் திட்டத்துக்காக ஏகப்பட்ட விதிகளை வைத்திருக்கிறது அரசு.
இந்தக் காரணங்களுக்காகத்தான் 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்ட பழைய நெய்வேலி ஊராட்சியில், ஊராட்சி கவுன்சிலர், 4 சக்கர வாகனம் வைத்திருப்போர், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் உள்ளிட்டோருக்கும் உரிமைத் தொகை செல்கிறது. மூன்று பேர் அரசு ஊழியர்களாக இருக்கும் குடும்பத்துக்கும் உரிமைத் தொகை, கணவருக்கு அரசு வேலை; கவுன்சிலர் மனைவிக்கு உரிமைத் தொகை எனவும் தாராளமாக டிக் அடித்திருக்கிறார்கள். இதன் உச்சமாக, ஒருநபர் குடும்ப அட்டை வைத்திருக்கும் ஆண் ஒருவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க சிபாரிசு செய்து மகத்தான சாதனை செய்திருக்கிறார்கள் வருவாய்த்துறையினர்.
இந்த ஊராட்சியில் மட்டும் 642 பேர் மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இதில் 70 பெயர்கள் ஆண்கள் பெயராக உள்ளது. இந்தப் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு நம்மிடம் பேசிய கம்மாபுரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் கலைச்செல்வன், தகுதியானவர்களை எல்லாம் நிராகரித்துவிட்டு, வசதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை வாரிக் கொடுக்கும் நோக்கில் வருவாய் துறையினர் செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு இந்த விஷயத்தில் உரிய விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக இதுவரை வழங்கப்பட்ட தொகையையும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த முறைகேட்டைக் கண்டித்து போராட்டத்தில் குதிப்போம்” என்றார்.
பட்டியலில் ஆண்கள் பெயர் இருப்பது குறித்தும் தகுதியவற்றவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவது குறித்தும் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலக துணை வட்டாட்சியர் சுமித்ராவிடம் (இத்திட்டத்திற்கான துணை வட்டாட்சியர்) கேட்டதற்கு, “அந்த ஊராட்சிக்கான பட்டியலில் உள்ளவர்கள் குறித்து விஏஓ மூலம் விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்” என்று சொன்னார்.
இரண்டு வாரம் கழித்து இது தொடர்பாக அவரை மீண்டும் நாம் தொடர்பு கொண்ட போது, “பட்டியலில் ஆண்கள் பெயர் இருந்தாலும் மகளிர் உரிமைத் தொகையானது மனைவியின் வங்கிக் கணக்கிற்குத் தான் செல்கிறது” என்றார்.
ஒருநபர் குடும்ப அட்டை வைத்திருக்கும் ஆண் ஒருவருக்கும் உரிமைத் தொகை செல்கிறதே எனக் கேட்டதற்கு, “அதுபற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல், பொதுத்துறை நிறுவனம் மற்றும் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை செல்வது குறித்து சென்னைக்கு அறிக்கை அளித்துள்ளோம். அங்கிருந்து வரும் உத்தரவைப் பொறுத்துத்தான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.