மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் நேற்று மாசி வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது ‘‘ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா’’ முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். நேற்று முன்தினம் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை சுவாமியும், அம்மனும் மாசி வீதிகளில் மண்டகப்படிகளில் எழுந்தருளி கீழமாசி வீதி தேரடிக்கு வந்தனர்.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பின்னர் அங்குள்ள தேரடி கருப்பணசாமி கோயிலில் தீபாராதனை நடந்தது. மங்கல வாத்தியங்கள் முழங்க காலை 6.20 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நிலையிலிருந்து புறப்பட்டது.
தொடர்ந்து, மீனாட்சி அம்மன் தேர் காலை 6.30 மணியளவில் புறப்பட்டது. சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும் பக்தர்கள் ‘‘ஹரஹர சங்கர மகா தேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா’ என முழக்கங்களை எழுப்பினர். தேரில் வீற்றிருந்த சுவாமியும், அம்மனை மாசி வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மக்கள் வெள்ளத்தில் தேர்கள் அசைந்தாடியபடி சென்றன.
மதியம் 12.30 மணிக்கு சுவாமி தேரும், 12.45 மணிக்கு அம்மன் தேரும் நிலைக்கு வந்தன. சுவாமியும், அம்மனும் தேரில் எழுந்தருளியதால், மீனாட்சியம்மன் கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது. இரவு 7 மணியளவில் சப்தாவர்ண சப்பரத்தில் கந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மற்றும் மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் எழுந்தருளினர். தேரோட்டத்தையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சித்திரைத் திருவிழாவின் 12-ம் நாளான இன்று (மே 10) தீர்த்தம், தெய்வந்திர பூஜை நடைபெறும், இரவில் வெள்ளி ரிஷப வாகனங்களில் அம்மன், சுவாமி எழுந்தருளுகின்றனர். இத்துடன் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
நாளை அழகருக்கு எதிர்சேவை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்றுடன் நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று மாலை புறப்படுகிறார். வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி வரும் அவருக்கு, நாளை காலை மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. நாளை மறுதினம் அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதைக்காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.