புதுடெல்லி: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி அழித்தது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். மத்திய அமைச்சர்கள், அமித்ஷா, ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் பண்டோபாத்யா, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், சிவசேனா (உத்தவ் அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜான் பிரிட்டாஸ், பிஜு ஜனதா தள மூத்த தலைவர் சஸ்மத் பத்ரா, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சஞ்ஜய் ஜா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி உட்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: இந்த கூட்டம் அரசியலுக்கான கூட்டம் கிடையாது. நாட்டை கட்டி எழுப்புவதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஆகும். இந்தியாவின் முப்படைகளும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூரை’ வெற்றிகரமாக நடத்தி உள்ளன. இந்த ராணுவ நடவடிக்கை மூலம் 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவடையவில்லை. ராணுவ நடவடிக்கை தொடர்கிறது. இப்போதைய நிலையில் எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது, எங்கெல்லாம் தாக்குதல் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது குறித்து பகிரங்கமாக கூற முடியாது.
முப்படைகளின் மூத்த அதிகாரிகள் மிக முக்கிய பணிகளில் பங்கேற்றிருப்பதால், அவர்களால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இந்த நேரத்தில் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில் மத்திய அரசின் நடவடிக்கைகள், ராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.