Last Updated : 09 May, 2025 02:45 PM
Published : 09 May 2025 02:45 PM
Last Updated : 09 May 2025 02:45 PM

அரூர்: அரூர் அருகே சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனை, தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா மற்றும் சர்க்கரை ஆலைத் துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (மே 9) காலை வந்தார். அப்போது ஆலையின் நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சம்பத்குமார் (அரூர்) கோவிந்தசாமி (பாப்பிரெட்டிபட்டி) ஆகியோர் தடுத்து நிறுத்தி , ஆலை செயல்பாடுகள் குறித்து சட்டசபையில் தவறான தகவல் கூறியதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆலையில் அமைக்கப்பட்ட இணை மின் நிலையம் பற்றிய கேள்விக்கு 40% பணிகள் நிறைவேற்றியதாக கூறினீர்கள். அப்படி பணி நடந்திருந்தால் நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் இல்லையென்றால் உங்கள் பதவியை ராஜினாமா செய்ய நீங்கள் தயாரா? என கோவிந்தசாமி எம்எல்ஏ அமைச்சரிடம் சவால் விட்டார். அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்க. காவல் துறையினர் எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் வந்த அதிமுகவினரை தடுத்து, அமைச்சரை ஆய்வு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அங்கிருந்தவர்கள் அமைச்சரை அழைத்து சென்றனர்.
பின்னர் அங்கு நடந்த விவசாயிகள் சங்க ஆய்வு கூட்டத்திலும் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் பங்கேற்று பேசினர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி பேசும்போது, “அமைச்சர் சட்டசபையில் பேசும்போது சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ள இணை மின் நிலையம் 40% பணிகள் நடைபெற்றதாக அமைச்சர் தவறான தகவல் தருகிறார்” எனக் கூறினார். இதையடுத்து அங்குள்ள திமுகவைச் சேர்ந்தவர்கள் இரண்டு எம்எல்ஏக்களும் வெளியேறுமாறு கூச்சலிட்டனர். இதனால் திமுக – அதிமுகவினர் இடையே மோதல் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் போலீஸார் இரு அதிமுக எம்எல்ஏக்களையும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றி, கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். அவர்களுடன் அதிமுக ஒன்றிய செயலாளர் பசுபதி மற்றும் 19 அதிமுகவினர் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இச்சம்பவத்தால் சர்க்கரை ஆலைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
FOLLOW US
தவறவிடாதீர்!