‘ஆபரேஷன் சிந்தூரில்’ முக்கிய பங்கு வகித்த கர்னல் சோபியா குரேஷி நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தீர்ப்பின்போதே அவருக்கு உச்ச நீதிமன்றம் புகழாரம் சூட்டியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2001-2002-ம் ஆண்டில் எல்லைப்பகுதியில் இந்திய, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.
அப்போது ஆபரேஷன் பராக்கிரம் என்ற பெயரில் சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் பஞ்சாப் எல்லைப் பகுதியில் பணியாற்றிய சோபியா குரேஷி மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதற்காக அவருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டில் காங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப் படையில் மூத்த அதிகாரியாக அவர் பணியாற்றினார். வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள நிவாரண மீட்புப் பணிகளிலும் அவர் மிகச் சிறப்பாக சேவையாற்றினார்.
ஒரு காலத்தில், இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு குறுகிய காலப் பணி (எஸ்எஸ்சி) மட்டுமே வழங்கப்பட்டது. இதன்படி பெண்கள் 14 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற முடியும். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கியது.
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ராணுவத்தில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பில் சோபியா குரேஷிக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவம் நடத்திய சர்வதேச போர் பயிற்சிக்கு லெப்டினென்ட் கர்னல் சோபியா குரேஷி தலைமையேற்று திறம்பட நடத்தி உள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு காங்கோவில் முகாமிட்டிருந்த ஐ.நா. அமைதிப் படையிலும் அவர் மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.
வெள்ள மீட்புப் பணி உள்ளிட்ட மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளார். ராணுவத்தில் அவரைப் போன்ற பெண் அதிகாரிகள் தேவை. எனவே ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் சோபியா குரேஷி பிரபலமடைந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 2020-ம் ஆண்டு தீர்ப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.