புதுடெல்லி: எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானுடனான மோதல்களைத் தொடர்ந்து மே 10-ம் தேதி வரை, நாட்டிலுள்ள குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள 21 விமான நிலையங்கள் மூடப்படுகின்றன.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வட்டாரங்களின் தகவல்கள் படி, இந்த விமான நிலையங்கள் மே 10-ம் தேதி அதிகாலை 5.29 மணி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாப்பின் அமிர்தசரஸில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “விமான சேவைகள் அனைத்தையும் ரத்து செய்யும் படியும், விமான நிலையங்களை மூடும்படியும் எங்களுக்கு உத்தரவு வந்தது. மறுஉத்தரவு வரும் வரை முழு விமான நிலையமும் மூடப்படும். அரசின் உத்தரவின் படி, வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் உள்ள 21 விமான நிலையங்கள் மே 10 வரை மூடப்படுகின்றன. இந்த விமான நிலையங்களில் இருந்து எந்த விமானங்களும் இயக்கப்படாது.” என்று தெரிவித்தார்.
யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், லே, பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் விமானநிலையங்கள் இதில் அடங்கும். இதன்மூலம், பெரிய அளவில் இந்திய விமான நிறுவனங்களும் உள்ளூர் சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்தியாவுக்குள் நுழைவதற்கான வான் பரப்பை பாகிஸ்தான் தடுத்துள்ளதால், அமெரிக்க விமான சேவை உட்பட சில வெளிநாட்டு விமான சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளன.
அரசின் உத்தரவுப்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் லேவில் உள்ள ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் விமானநிலையங்கள், பஞ்சாப்பில் உள்ள, அமிர்தசரஸ், சண்டிகர், பட்டியாலா, ஹல்வாரா, இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சிம்லா மற்றும் தர்மசாலா, ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர், பிகானேர், ஜெய்சால்மர் மற்றும் கிருஷ்ணகார்க், குஜராத்தில் உள்ள புஜ், ஜாம்நகர், ராஜ்கோட், முந்ரா, போர்பந்தர், காத்லா, கேஷுத் விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இவற்றில் பல விமான நிலையங்களை பல்வேறு விமான நிறுவனங்களுடன் இந்திய விமானப் படையும் சேர்ந்து பயன்படுத்துகின்றன. இதனிடையே, 11 விமான நிலையங்களில் 165 விமான சேவைகளை மே 10-ம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. அதேபோல், 9 விமான நிலையங்களில் விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியாவும் உறுதிப்படுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில் இந்த விமான நிலைய மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.