சென்னை: இந்து தமிழ் திசை நாளிதழின் மாயாபஜார் பகுதிக்கு 9-ம் வகுப்பு மாணவன் எழுதிய பாராட்டு கடிதத்தை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்து தமிழ் திசை நாளிதழில் வரும் வார இணைப்பு இதழான மாயாபஜாரில் ஒரு கடிதம் எழுதுகிறேன் எனும் பகுதியுள்ளது. இதில் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் நணபர்கள் குறித்து மாணவர்கள் எழுதிய சிறந்த கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் தேவ் சஞ்சய் கிருஷ்ணா தனது வீட்டுக்கு அருகேவுள்ள அரசு நூலகம் சிறப்பாக உள்ளதாகக் கூறி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதம் மாயாபஜார் பகுதியில் வெளியானது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கலைஞர் நூற்றாண்டு நூலகத்தால் செழுமையடையும் நாளைய தமிழகம். அன்புள்ள தேவ் சஞ்சய் கிருஷ்ணா, உன் வாசிப்பு ஆர்வம் கண்டு மகிழ்கிறேன். இளையோரிடம் இருந்து பெறும் பாராட்டு எப்போதுமே இருமடங்கு ஊக்கமளிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.