நாகர்கோவில்: சித்ரா பவுர்ணமியான வரும் 12-ம் தேதி மாலையில் கன்னியாகுமரியில் சூரியன் மாலை நேரத்தில் மறையும் காட்சியையும், அதேநேரத்தில் சந்திரன் உதயமாகும் காட்சியையும் காணலாம். இவ்விரு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் அபூர்வத்தை குமரியிலும், தென் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே காண முடியும்.
கோடை விடுமுறையில் இந்நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், குமரி கடற்கரைப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அரபிக் கடல் பகுதியில் சூரியன் மறைவதையும், அதே நேரத்தில் கிழக்கே வங்கக் கடல் பகுதியில் பூரண சந்திரன் உதயமாவதையும் காணலாம்.
இந்நிகழ்வைக் காண்பதற்காக வரும் 12-ம் தேதி மாலையில் குமரி முக்கடல் சங்கம கடற்கரை, சூரிய அஸ்தமன மையம், முருகன் குன்றம் மலை மற்றும் தனியார் லாட்ஜ்களின் மொட்டைமாடி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் திரள்வார்கள் என்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.