காஞ்சிபுரம் அடுத்த முருகன் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டில் தாட்டிதோப்பு எனப்படும் முருகன் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு, அண்ணாநகர், செல்லியம்மன் நகர், பல்லவர் நகர் உட்பட பல்வேறு நகர் பிரிவுகள் அமைந்துள்ளன. இங்கு, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் மற்றும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பலர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நெசவுத்தொழிலாளர் தாங்கள் உற்பத்தி செய்யும் பட்டுச் சேலைகளை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக நகரப்பகுதிக்கு வந்து செல்ல வேகவதி ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக, வேகவதி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு இடங்களில் சிமென்ட் குழாய்கள் மூலம் தற்காலிக தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், கனமழை காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இந்த தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்தன.
இதனால், மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சுமார் 3 கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு முத்தியால் பேட்டையை அடைந்து, காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரதான சாலை வழியாக நகருக்குள் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், முருகன் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, முருகன் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஜெயவேல் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வேகவதி ஆற்றின் குறுக்கே பனைமரங்களை அடுக்கி பொதுமக்கள் ஆற்றை கடந்து சென்று வந்தனர். இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பொதுமக்கள் இப்பகுதியிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ரூ.2.25 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், உரிய காரணங்கள் இன்றி தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோடைக்காலத்தில் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள முடியும். அதனால், மாநகராட்சி நிர்வாகம் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: முருகன் குடியிருப்பு மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, செல்லியம்மன் நகர் பகுதி அருகே வேகவதி ஆற்றின் குறுக்கே ரூ.2.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.