தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக நாள் மற்றும் நேரம் குறித்து கோயில் விதாயகர்த்தா சிவசாமி சாஸ்திரிகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விதாயகர்த்தாவாக நான் பணியாற்றுகிறேன். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நாள் பார்த்து குறித்து கொடுத்து வருகிறேன்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இக்கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் குறித்து தருமாறு கோயில் இணை ஆணையர் கேட்டுக்கொண்டதன் பேரில் விசுவாவசு வருடம் ஆனி மாதம் 23-ம் தேதி (07.07.2025) காலை 6 முதல் 7 மணி வரை மற்றும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை என இரண்டு முகூர்த்த நேரங்கள் குறித்துக்கொடுத்தேன். அப்போது இவ்வருடத்துக்கான வாக்கிய பஞ்சாங்கம் வெளிவரவில்லை.
தற்போது வாக்கிய பஞ்சாங்கம் வெளியாகியுள்ளது. அதன் படி பார்க்கும் போது மேற்குறிப்பிட்ட நேரங்களை விட அபிஜித் முகூர்த்தம் சரியாக இருக்கும் என்பதால், இது குறித்து ஸ்தலத்தார் சபை மற்றும் கைங்கர்ய சபை நிர்வாகிளுடன் கலந்து பேசி முகூர்த்ததில் உள்ள சின்ன சின்ன குறை பாடுகளை சரி செய்த பின் தற்போது வெளியாகியுள்ள புதிய பஞ்சாங்கம் படி பகல் 12.05 மணி முதல் 12.47 மணிக்குள் உள்ள முகூர்த்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது சிறப்பாக இருக்கும் என தபால் கொடுத்துள்ளோம்.
இது குறித்து அதிகாரிகளிடன் பேசும் போது அவர்கள் 9 முதல் 10.30-க்கான நேரத்தை குறிப்பிட்டு பேசினார்கள். அவர்களிடம் சுக்ல பஷ்ச துவாதசி, அனுசம் நட்சத்திரதில், சித்த யோகத்தில் உள்ள அபிஜித் முகூர்த்தமான 12.05 முதல் 12.47 வரை உள்ள இந்த நேரத்தில் கும்பாபிஷேகம் செய்வதால் பக்தர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், நாட்டு மக்களுக்கும், கிராம மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் நல்லது நடக்கும்.
எனவே பகல் 12.05 முதல் 12.47 வரை உள்ள நேரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என்று விளக்கி கூறியுள்ளோம். மேலும் முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், இக்கோயில் தக்கார், இணை ஆணையர் ஆகியோர்களுக்கு மனுவும் கொடுத்துள்ளோம் எனவே அனைவரின் நலன் கருதி பகல் அபிஜித் முகூர்த்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.
அப்போது, திரிசுதந்திர ஸ்தலத்தார் சபை தலைவர் வீரபாகுமூர்த்தி அய்யர், செயலாளர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் தேவராஜன் ஆனந்த், கைங்கர்ய சபா தலைவர் ஆனந்த், செயலாளர் கட்டியம் ராஜன், துணைத்தலைவர் ஆகாஷ், மூத்த நிர்வாகிகள் சங்கரசுப்பு சாஸ்திரிகள், ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.