சென்னை: அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு இத்தாலி அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஐரோப்பிய அணிகளுக்கான தகுதி சுற்றில் இத்தாலி விளையாடியது. இதில் ஸ்காட்லாந்து மற்றும் குயெர்ன்சி அணிகளை இத்தாலி வீழ்த்தியது. நெதர்லாந்து அணி உடன் தோல்வியை தழுவியது. Jersey உடனான ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது இத்தாலி.
2 வெற்றி 1 தோல்வி உடன் 5 புள்ளிகளை பெற்று ரன் ரேட் அடிப்படையில் டி20 உலகக் கோப்பைக்கு முதல் முறையாக இத்தாலி தகுதி பெற்றுள்ளது. அந்த அணியை ஆஸ்திரேலிய அணிக்காக முன்பு விளையாடிய ஜோ பர்ன்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
இத்தாலி என்றாலே பலருக்கும் அந்நாட்டின் கால்பந்து அணிதான் நினைவுக்கு வர வாய்ப்புள்ளது. சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் அந்த அணி முத்திரை பாதித்துள்ளது. நான்கு முறை உலகக் கோப்பையில் பட்டம் வென்றுள்ளது இத்தாலி. 2 முறை யூரோ சாம்பியன் மற்றும் 2 முறை நேஷன்ஸ் லீக் தொடரில் பட்டம் வென்றுள்ளது. ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றுள்ளது.
டி20 உலக கோப்பை 2026: இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு இந்த தொடர் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தியா இந்த தொடரில் விளையாடுகிறது. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து அணிகள் இதுவரை இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.
இன்னும் 5 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற வேண்டி உள்ளது. அதில் இரண்டு அணிகள் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவகையாக இருக்கும். மற்ற மூன்று அணிகள் ஆசியாவை சேர்ந்த அணிகளாக இருக்கும்.