சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் வீரர்களுக்கான ஏலத்தில் தனது பெயரை அஸ்வின் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். அதோடு வெளிநாடுகளில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக தனது எதிர்கால கிரிக்கெட் செயல்பாடு குறித்தும் அஸ்வின் வெளிப்படையாக பேசியிருந்தார்.
இந்த சூழலில் ஐபிஎல் போலவே அமீரகத்தில் நடைபெறும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடருக்கான ஏலம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏலத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான கடைசி தேதி செப்டம்பர் 10 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஸ்வின் ஐஎல்டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடுவதை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் ஒன்றிடம் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐஎல்டி20 லீக் சீசன் வரும் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஐஎல்டி20 லீக் தொடரில் தங்களுக்கு சொந்தமாக அணிகளை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராபின் உத்தப்பா, யூசுப் பதான், ராயுடு ஆகிய இந்திய வீரர்கள் இந்த தொடரில் விளையாடி உள்ளனர். ஐபிஎல் மற்றும் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் தொடர்களில் கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர்கள் பிற நாட்டு கிரிக்கெட்டில் லீக் தொடர்களில் பங்கேற்று விளையாட அனுமதி கிடையாது. தற்போது அஸ்வின், இந்திய அணி மற்றும் ஐபிஎல் என அனைத்திலும் ஓய்வு அறிவித்துள்ளார். அதனால் அவர் சர்வதேச அளவில் நடைபெறும் டி20 லீக்கில் ஒரு ரவுண்டு வர உள்ளார்.