லண்டன்: இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 சமனில் உள்ளது. இன்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த தொடரின் 3-வது போட்டி தொடங்குகிறது. இந்நிலையில், டியூக்ஸ் பந்துகள் தரம் குறித்து ரிஷப் பந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளின் போதும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்து தொடர்பாக கள நடுவர்களை அணுகி பேசியதை அனைவரும் கவனித்திருக்க வாய்ப்புள்ளது. முதல் போட்டியின் போது பந்து குறித்து நடுவர் உடன் ரிஷப் பந்த நீண்ட நேரம் விவாதம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“இந்த தொடரில் பந்து அதிகம் அதன் வடிவத்தை இழப்பதை நான் கவனித்தேன். இது போல இதற்கு முன்பு எனக்கு நடந்தது இல்லை. இது நிச்சயம் வீரர்களை விரக்தி கொள்ள செய்கிறது. பந்து மென்மையாக இருந்தால் சில நேரங்களில் அதன் செய்லபாடு சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. அதுவே பந்து மாற்றப்பட்டால் அதன் ரிசல்ட் வேறு விதமாக உள்ளது. பேட்ஸ்மேனாக அதற்கு தகுந்த படி விளையாட வேண்டி உள்ளது. இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என நினைக்கிறேன்” என்று ரிஷப் பந்த் கூறினார்.
டியூக்ஸ் பந்துகள் அதன் வடிவத்தை விரைந்து இழப்பது மற்றும் பந்து மென்மையாக மாறுவது தொடர்பாக இதற்கு முன்பு இந்திய கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.