மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக விளையாடி டிரா செய்தது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடி இந்திய அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே 2 விக்கெட்களை பறிகொடுத்த போதிலும் கேப்டன் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் ஜோடி அபாரமாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது.
ஷுப்மன் கில் 103 ரன்களும், கே.எல்.ராகுல் 90 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஜோடி மிக அற்புதமாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்காமல் அந்த அணி வீரர்களை களத்தில் வெகு நேரம் பீல்டிங் செய்ய வைத்து சோர்வடையச் செய்தது. இந்த ஜோடி 334 பந்துகளை சந்தித்து 203 ரன்களை வேட்டையாடியது.
கடைசி நாள் ஆட்டத்தில் 15 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் போட்டியை டிராவில் முடித்துக்கொள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முன்வந்தார். ஆனால் இதை ஜடேஜா ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது ஜடேஜா 90 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களையும் கடந்து சதத்தை நெருங்கும் நிலையில் இருந்தனர். குழு விளையாட்டில் எப்போதும் தனிநபர் சாதனைக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாததுதான்.
ஆனால் இவர்கள் இருவரும் போராடிய விதம் அவர்கள், சதம் அடிக்க தகுதியானவர்கள் என்ற கருத்தே கிரிக்கெட் ரகிகர்கள் அனைவரது மனதிலும் மேலோங்கியிருந்தது. இறுதியாக ஜடேஜா 5-வது சதத்தையும், வாஷிங்டன் சுந்தர் முதல் சதத்தையும் நிறைவு செய்து ஆட்டத்தை டிரா செய்தனர். போட்டி டிராவில் முடிவடைந்த போதிலும் களத்தில் போட்டியை பார்த்த ரசிகர்கள் எந்த ஒரு கட்டத்திலும் சலிப்படையவில்லை. அந்த அளவுக்கு ஜடேஜாவும் (107*), வாஷிங்டன் சுந்தரும் (101*) இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு பதிலடி கொடுத்தனர். அதிலும் பென் ஸ்டோக்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஹூக் ஷாட்டில் சிக்ஸர் விளாசிய விதம் அற்புதமானது.
தோல்வி அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்த நிலையில் அதற்கு இடம் கொடுக்காமல் இந்திய அணி அற்புதமாக விளையாடி களத்தில் இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்த விதம் பாராட்டும் வகையில் இருந்தது. இந்த போட்டி டிராவில் முடிவடைந்தாலும் இது வெற்றிக்கு நிகராக கருதவேண்டிய ஆட்டமே.
தோல்வியின் விளிம்பை எட்டிப்பார்க்க கூடிய இடத்தில் இருந்து ஆட்டத்தை டிராவை நோக்கி நகர்த்திய இந்திய அணி வீரர்களின் மனரீதியான போராட்டம் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியையும் விரக்திக்கு கொண்டு சென்றது என்றுதான் கூற வேண்டும். இதுதான் கடைசி ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அந்த அணி வீரர்கள் நடந்துகொண்ட விதத்தை வெளிக்காட்டியது.
இந்த ஆட்டத்தின் முடிவானது வரும் 31-ம் தேதி லண்டனில் தொடங்க உள்ள கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மான்செஸ்டர் போட்டி முடிவடைந்ததும் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரிடம், 4-ம் நாள் ஆட்டத்துக்கு பிறகு இந்திய அணி வீரர்களிடம் 2009-ம் ஆண்டு நீங்கள் நேப்பியரில் போராடி சேர்த்த 137 ரன்களைப் பற்றிக் குறிப்பிட்டு உத்வேகம் கொடுத்தீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து கவுதம் கம்பீர் கூறியதாவது: நான் விளையாடிய எந்த இன்னிங்ஸும் நினைவில் இல்லை, அது வரலாறாக மாறிவிட்டது. தற்போது இந்திய அணியில் உள்ள வீரர்கள் தங்களது சொந்த வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், இந்த அணியில் யாரும் யாரையும் பின்தொடருவது இல்லை, அதை அவர்கள் விரும்புவதும் இல்லை. வீரர்கள் தங்கள் சொந்த வரலாற்றை உருவாக்க வேண்டும்.
இந்த வீரர்கள் நாட்டுக்காக போராட விரும்புகிறார்கள், அதை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள். 5 செஷன்கள் வீரர்கள் அழுத்தத்தின் கீழ் விளையாடிய உள்ளார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் அழுத்தத்தில் இருந்து வெளியே வந்து விளையாடுவது எப்போதுமே சிறப்பான விஷயம். இது வீரர்கள் மத்தியில் நம்பிக்கையை கொடுக்கும். இந்த செயல் திறன் ஓவலில் நடைபெறும் போட்டிக்கு நம்பிக்கையை கொடுக்கும் என்று நம்புகிறேன். ஆனால் நாங்கள் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
இந்திய அணி மாற்றத்துக்கான கட்டத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனெனில் இது இந்திய அணி. அணியை பிரதிநித்துவப்படுத்தும் சிறந்த 18 வீரர்கள் உள்ளனர். அனுபவம் மற்றும் அனுபவமின்மை ஆகியவற்றையே கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் அப்படிதான் பார்க்கிறோம். முக்கியமான விஷயம் என்னவென்றால் கடைசி நாளில் விளையாடிய விதத்தில் இருந்து வீரர்கள் அதிகம் கற்றுக்கொண்டுள்ளனர். ஏனெனில் அழுத்தமான சூழ்நிலையில் தாக்குதல் பந்து வீச்சை கொண்ட இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக 5 செஷன்கள் விளையாடி 4 விக்கெட்களை மட்டுமே இழந்து போட்டியை டிரா செய்வது என்பது எளிதானது அல்ல. இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.