லண்டன்: ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 6 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டத்தை நடுவர்கள் முன்கூட்டியே நிறைவு செய்தது ஏன்? என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
4-ம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டது. அதன் பின்னர் நடுவர்கள் அந்த நாள் ஆட்டத்தை நிறைவு செய்யும் முடிவை அறிவித்தனர். அப்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவையாக இருந்தது. இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆட்டம் 5-ம் நாளன்று நடத்தப்பட்டது. இதில் இந்தியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
இந்த நிலையில்தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஆகியோர் 4-ம் நாள் ஆட்டத்தை முன்கூட்டியே நடுவர்கள் முடித்துக் கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
மழைக்கு பிறகு வீரர்கள் களத்துக்கு திரும்புவதற்கான கட் ஆஃப் டைம் இந்திய நேரப்படி இரவு 11.12 மணி என இருந்தது. ஆனால், அதற்கு 12 நிமிடங்களுக்கு முன்கூட்டியே நான்காம் நாள் ஆட்டம் முடிவுற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அதற்கடுத்த சில நிமிடங்களில் ஓவல் மைதானத்தில் வானிலை மாறி வெயில் அடித்தது.
“ஆட்டம் மீண்டும் தொடங்க 20 நிமிடம் வரை நேரம் இருந்தது. பார்வையாளர்களும் இந்தப் போட்டியின் முடிவை காண தயாராக இருந்தனர் என என்னால் உணர முடிந்தது. அந்த சூழலில் மாலை 6 மணிக்கே போட்டியை நடுவர்கள் முடித்தது சோம்பலான முடிவு என நான் கருதுகிறேன். அதை யார் செய்வார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என பிராட் கூறியுள்ளார்.
“பார்வையாளர்கள் தங்கள் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி உள்ளனர். திங்கட்கிழமை வேலை நாள் என்பதை வைத்து பார்க்கும் போது ஓவல் மைதானத்தில் இந்த மாதிரியான ஆட்டத்தில் பெரிய கூட்டத்துக்கு முன்பாக முடிவு எட்டப்பட்டு இருக்க வேண்டும். நடுவர்கள் கூடுதல் நேரத்தை வழங்கி இருக்கலாம். அது விதிகளுக்கு உட்பட்டது தான். அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவையென இருந்திருந்தால் நிச்சயம் அந்த கூடுதல் நேரம் கிடைத்திருக்கும்” என நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.