பெங்களூருவில் நடைபெறும் துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் வடக்கு மண்டல அணியின் ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி கிழக்கு மண்டல அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இதன் மூலம் துலீப் டிராபியில் ஹாட்ரிக் சாதனை புரிந்த ஜாம்பவான் கபில் தேவ் சாதனையைச் சமன் செய்தார் ஆகிப் நபி. இதோடு நில்லாமல் 4-வது விக்கெட்டையும் தொடர்ச்சியாக வீழ்த்தினார் ஆகிப் நபி.
நபியின் ஆக்ரோஷ வீச்சின் ஹாட்ரிக்குக்கு வீழ்ந்த கிழக்கு மண்டல வீரர்கள் விராட் சிங், மனிஷி, மற்றும் முக்தர் ஹுசைன். இது அவர் 4,5,6 ஆகிய பந்துகளில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுகள், இவரே தன் அடுத்த ஓவரின் முதல் பந்தில் சூரஜ் சிந்து என்பவரையும் வீழ்த்தி தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
துலிப் டிராபியில் வேகப்பந்து வீச்சாளர் என்ற அளவில் கபில் தேவ் ஹாட்ரிக் சாதனையைச் சமன் செய்த ஆகிப் நபி 3-வது ஹாட்ரிக் சாதனையாளர் ஆவார். இன்னொரு ஹாட்ரிக் சாதனையாளர் லெக் ஸ்பின்னர் சாய்ராஜ் பஹுதுலே ஆவார். அதேபோல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாகக் கைப்பற்றிய 4-வது இந்திய பவுலர் ஆவார் ஆகிப் நபி.
முதல் தரக் கிரிக்கெட்டில் 1988-89-ல் எஸ்.எஸ்.சைனி என்ற பவுலர் டெல்லி – இமாச்சல் போட்டியில் 4 விக்கெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றினார். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இன்னொரு பவுலர் முகமது முதாசிர் ராஜஸ்தானுக்கு எதிராக 2018-19-ல் இதே சாதனையைப் புரிந்தார். 2023-24-ல் குல்வந்த் கேஜ்ரோலியாவும் 4 விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக எடுத்துள்ளனர்.
வடக்கு மண்டல அணி தன் முதல் இன்னிங்சில் 405 ரன்களைக் குவிக்க, ரியான் பராக் தலைமை கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 230 ரன்களுக்குச் சுருண்டது.