புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்த நிலையில் தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாராவின் 400 ரன் சாதனையை தகர்க்கும் வாய்ப்பு இருந்தும் அதை அவர் தவிர்த்தார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நடப்பு டெஸ்ட் உலக சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணியில் சீனியர் வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ள நிலையில், இளம் வீரர்கள் உடன் அந்த அணி இந்த தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது தென் ஆப்பிரிக்கா.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புலவாயோவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 114 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 626 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் வியான் முல்டர் 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்தார். 49 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.
வியான் முல்டர் சாதனை: டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன், தென் ஆப்பிரிக்கா தரப்பில் 300+ ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன்கள், தென் ஆப்பிரிக்கா சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் உள்ளிட்ட சாதனைகளை முல்டர் இந்த இன்னிங்ஸ் மூலம் படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முல்டர் 5-ம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 400 ரன்கள் உடன் லாரா உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான செயின்ட் ஜான்ஸ் மைதானத்தில் இந்த சாதனையை லாரா படைத்திருந்தார்.