செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், பிரேசிலின் சாமுவேல் சேவியனுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 44-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் 46-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. அமெரிக்காவின் பேபியானோ கருனா, 46-வது நகர்த்தலின் போது பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவை தோற்கடித்தார்.
அமெரிக்காவின் லெவோன் அரோனியன், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர் லாக்ரேவ் மோதிய ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் வெஸ்லி சோ, போலந்தின் டுடா ஜான் கிரிஸ்டோஃப் மோதிய ஆட்டம் 32-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
3 சுற்றுகளின் முடிவில் பேபியானோ கருனா, லெவோன் அரோனியன், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளனர். வெஸ்லி சோ, மாக்சிம் வச்சியர் லாக்ரேவ் சாமுவேல் சேவியன், அலிரேசா ஃபிரோஸ்ஜா, குகேஷ் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 8-வது இடங்களில் உள்ளனர். டுடா ஜான் கிரிஸ்டோஃப் ஒரு புள்ளியுடன் 9-வது இடத்திலும், நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 0.5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.