லீட்ஸில் தோற்று, எட்ஜ்பாஸ்டனில் வரலாற்று வெற்றி பெற்றாலும் அணிச் சேர்க்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனக் கருத்தை முன்வைத்துள்ளார்.
கருண் நாயர் லீட்ஸில் ஸ்கோர் 400-க்குப் பிறகு இறங்கியும் சரியாக ஆடவில்லை, இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பல், பர்மிங்ஹாமிலும் திருப்திகரமாக ஆடவில்லை ஆகவே அவர் 3-ம் நிலைக்கு லாயக்கில்லை, சாய் சுதர்சனைக் கொண்டு வர வேண்டியதுதான் என்கிறார் மஞ்ச்ரேக்கர்.
“கடந்த டெஸ்ட்டில் சுவாரஸ்யமான அணித்தேர்வுகள் நடைபெற்றன. அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். வெற்றி பெற்று விட்டோம் என்பதற்காக சில முடிவுகளை நாம் ஏற்க முடியாது. சாய் சுதர்ஷன் ஒரு இளம் வீரர், ஒரு போட்டிக்குப் பிறகே அவரை உட்கார வைத்து வேடிக்கைப் பார்ப்பது அழகல்ல. ஹெடிங்லேயில் 2-வது இன்னிங்சில் அவர் ஆட்டம் பரவாயில்லை, அவருடனேயே 3-ம் நிலையைத் தொடர வேண்டும்.
ஆனால் இந்த அணித்தேர்வுக்குழு, நிர்வாகம் வீரர்களை அனுப்புவதும் தேர்ந்தெடுப்பதுமாக உள்ளதை விரும்புகின்றனர். சாய் சுதர்சன் 3-ம் நிலைக்குப் பொருத்தமானவரே, கருண் நாயர் 3-ம் நிலைக்கு பொருத்தமானவர் அல்ல. சாய் சுதர்சனை ஒரு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியிலிருந்து தூக்குவது நியாயமற்றது. ஒரு டெஸ்ட்டிற்குப் பிறகு அனைவரும் பெரிய சதங்களை எடுக்கின்றனர். எனவே சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் அதற்கு அவர் தகுதியானவரே.
கடந்த வெற்றிக்குப் பிறகே இந்திய அணி ரிலாக்ஸ் ஆகிவிடக்கூடாது. நம் அணி எந்த அளவுக்கு நல்ல அணி என்பதில் இந்திய அணி நிர்வாகம் தன் எண்ணத்தில் எதார்த்தச் சிந்தனையுடனும் நடைமுறை ரீதியாகவும் அணுக வேண்டும்.
இன்னும் கூட இந்திய அணி தங்களது பேட்டிங்கில் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். ஷுப்மன் கில் அடித்த பெரிய சதங்கள் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இதே ஷுப்மன் கில் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 103, 104 ரன்களை எடுத்திருந்தார் என்றால் வெற்றி கடினமாக மாறியிருக்கும்.
இது போன்ற எத்தனையோ விஷயங்களை ஷுப்மன் கில் பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ளார். ஆகவே அனைவரும் நல்ல பேட்டிங் ஆட வேண்டும் என்பதை இந்திய அணி உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஜோப்ரா ஆர்ச்சர் என்ற மாற்றத்திற்குப் பிறகே இங்கிலாந்து பந்து வீச்சு கூர்மையாகவும் ஆற்றலுடனும் விளங்கும். இதை மறந்து விடக்கூடாது. எச்சரிக்கைத் தேவை” என்றார் மஞ்ச்ரேக்கர்.