திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கேரள கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி 13 பந்துகளில் 11 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார் சல்மான் நிசார் எனும் இளம் வீரர். அவர் இந்த தொடரில் கோழிக்கோடு அணிக்காக விளையாடுகிறார்.
சனிக்கிழமை மதியம் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். 13.1 ஓவர்களில் கோழிக்கோடு அணி 76 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது பேட் செய்ய களத்துக்குள் சல்மான் நிசார் வந்தார். வந்தது முதலே தனது அதிரடியை அவர் தொடர்ந்தார். 21 வயதான அவர், இடது கை பேட்ஸ்மேன்.
தனது இன்னிங்ஸில் 26 பந்துகளில் 86 ரன்களை அவர் விளாசி இருந்தார். இதில் கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் 31 மற்றும் 38 ரன்களை அவர் விளாசி இருந்தார். 19-வது ஓவரில் 5 சிக்ஸர்கள் மற்றும் 20-வது ஓவரில் 6 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார். அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை திருவனந்தபுரம் அணி, 19.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 13 ரன்களில் கோழிக்கோடு அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சல்மான் நிசார் வென்றார். தற்போது புள்ளிப்பட்டியலில் 2-வைத்து இடத்தில் உள்ளது கோழிக்கோடு அணி. மொத்தம் 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன.