துபாயில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
டி20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 11-3 என்ற வெற்றி விகிதத்தை இந்திய அணி நேற்றைய வெற்றியுடன் கடைப்பிடித்து வருகிறது. ஹர்திக் பாண்டியா தன் முதல் பந்திலேயே சயீம் அயூபை வீழ்த்தினார். அயூப் என்ன ஆடினார் என்பது அவருக்கே வெளிச்சம். பாயின்டில் பும்ரா கையில் கேட்ச் ஆனது. 0/1 என்று அதிர்ச்சித் தொடக்கம் கண்டது.
இந்திய அணியின் வலுவான பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு கொஞ்சம் அதிகப்படிதான் என்பது போல்தான் பாகிஸ்தான் ஆட்டம் இருந்தது. 63 பந்துகளில் ரன் எதுவும் ஸ்கோர் செய்யவில்லை என்றால், இந்தியப் பந்துவீச்சு பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. பந்துக்கு ஒரு ரன் என்ற ரன் விகிதமே கடைசி ஓவரில்தான் வந்தது. ஒருநாள் போட்டிகளில் கூட எந்த அணியும் இப்படி திணற மாட்டார்கள்.
குல்தீப் யாதவ் 3 விக்கெட், அக்சர், பும்ரா தலா 2 விக்கெட்டுகள். வருண், ஹர்திக் தலா 1 விக்கெட். பாகிஸ்தானின் சாஹிப் ஜதா ஃபர்ஹான் கொஞ்சம் வெளிச்சமும் தைரியமும் கொடுத்தார். பும்ராவை 2 சிக்சர்கள் விளாசினார். அனைத்து டி20-களிலும் பும்ராவை பவர் ப்ளேயில் 2 சிக்சர்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரராகவும், மொத்தத்தில் 6-வது வீரராகவும் திகழ்ந்தார். இவர்தான் நன்றாக ஆடி 44 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்கள் என்று 40 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார்.
ஸ்பின்னர்களான வருண் சக்ரவர்த்தி, குல்தீப், அக்சர் படேல் என்ற மும்மூர்த்திகள் வந்த பிறகே பாகிஸ்தான் ஸ்கோரிங் வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து விட்டது. பவர் ப்ளேவுக்குப் பிறகே ஒரு பவுண்டரி அடிக்க 31 பந்துகள் ஆயிற்று. இடைப்பட்ட ஓவர்களில் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தனர். அதுவும் பகர் ஜமான், சல்மான் ஆகா ஷாட்கள் வெறுப்பில் விளைந்தவை.
அதன்பிறகே குல்தீப் யாதவ்வை ஆட முடியவில்லை. அவரது ராங் ஒன்கள் பாகிஸ்தான் டெக்னிக், கற்பனைத் திறன், கணிப்புத் திறன்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. கடைசியில் இறங்கி ஷாஹின் ஷா அஃப்ரீடி 16 பந்துகளில் 33 ரன்களை விளாசி பாகிஸ்தானுக்கு ஓரளவுக்கு மரியாதையான 127 ரன்களை எடுக்க உதவினார்.
பந்துவீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரீடியின் தொடக்க விக்கெட்டுகளில் வைத்திருந்த நம்பிக்கை அபிஷேக் சர்மாவின் அலட்சிய அதிரடி தவிடுபொடியாக்கியது. அவர் அஃப்ரீடியின் முதல் பந்தையே இறங்கிவந்து நேராக இடி போன்ற ஷாட்டில் பவுண்டரி விளாசினார், போதாதென்று லாங் ஆஃபில் அப்ரீடியை சிக்ஸருக்குத் தூக்கினார். உன்னிடம் விக்கெட்டை கொடுத்ததெல்லாம் அந்தக் காலம் என்பது போல் இருந்தது அவரது ஆட்டம். 2 ஓவர்களில் 23 ரன்கள் என்று அவரை அதன்பிறகு கொண்டே வரவில்லை.
சயீம் அயூபை கில் 2 பவுண்டரிகள் விளாசினாலும் அயூப் அபிஷேக், கில் இருவரையும் வீழ்த்தினார். பவர் ப்ளே முடிந்து இந்தியா அடுத்த 7 ஓவர்களில் 39 ரன்களையே எடுக்க முடிந்தது. அப்ரார் அகமது 4 ஓவர்கள் 16 ரன்களையே விட்டுக் கொடுத்தாலும் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஷிவம் துபே அட்டகாசமாக முடித்தனர்.