ஹாங் காங்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவில் சாட்விக்-ஷிராக் ஜோடியும் கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.
ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 20-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்ஷயா சென், சகநாட்டைச் சேர்ந்த 34-ம் நிலை வீரரான ஹெச்.எஸ்.பிரனாயுடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 15-21, 21-18, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற தொடர்களில் தற்போதுதான் முதன்முறையாக லக்ஷயா சென் கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
23 வயதான லக்ஷயா சென், கால் இறுதி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த 31-ம் நிலை வீரரான ஆயுஷ் ஷெட்டியுடன் மோதுகிறார். ஆயுஷ் ஷெட்டி 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோடை நரோகாவை 21-19, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி தாய்லாந்தின் சுக்பூன், தீரரட்சகுல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 18-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் இந்திய ஜோடி, மலேசியாவின் ஜுனைடி ஆரிஃப், ராய் கிங் யாப் ஜோடியுடன் மோதுகிறது.