சென்னை: சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம்தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன.
இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. நடப்புச் சாம்பியன் ஜெர்மனி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் தென் ஆபிரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
போட்டியை நடத்தும் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளும் உள்ளன. ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, நியூஸிலாந்து, ஜப்பான், சீனா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘டி’ பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா ஆகிய அணிகளும், ‘இ’ பிரிவில் நெதர்லாந்து,மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா ஆகிய அணிகளும் ‘எஃப்’ பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, வங்கதேசம் ஆகியஅணிகளும் இடம்பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். இந்த 6 அணிகளுடன் லீக் சுற்றில் 2-வது இடத்தை பிடிக்கும் 2 சிறந்த அணிகளும் கால் இறுதி சுற்றில் இணையும். கால் இறுதி ஆட்டங்கள் டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தொடர்ந்து அரை இறுதி ஆட்டங்கள் டிசம்பர் 7-ம் தேதியும் இறுதிப் போட்டி 10-ம் தேதியும் சென்னையில் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணை வெளியீடு நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டி அட்டவணையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் யப் இக்ரம், ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் திர்கே, பொதுச் செயலாளர் போலோநாத் சிங், பொருளாளர் சேகர் ஜே.மனோகரன், அரசு செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டி அட்டவணையின்படி லீக் சுற்றில் ஒரே நாளில் சென்னையில் 4 ஆட்டங்களும், மதுரையில் 4 ஆட்டங்களும் நடைபெறுகின்றன. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மதுரையில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 28-ம் தேதி சிலியுடன் மோதுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்த ஆட்டம் மாலை 5.45 மணிக்கு நடைபெறும்.
தொடர்ந்து 29-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி சுவிட்சர்லாந்துடன் மோதுகிறது.ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் 2013-ல் டெல்லியிலும், 2016-ல் லக்னோவிலும், 2021-ல் புவனேஷ்வரிலும் நடைபெற்றிருந்தது. இம்முறை அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.65 கோடியை ஒதுக்கியுள்ளது.
சூப்பர் 4 சுற்றில் இந்திய மகளிர் அணி: மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிங்கப்பூர் அணியை 12-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று சிங்கப்பூருடன் மோதியது.
இதில் இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நவ்னீத் கவுர், மும்தாஜ் கான் ஆகியோர் தலா 3 கோல்களை அடித்து அசத்தினர். நேஹா 2 கோல் அடித்தார். லால்ரெம்சியாமி, ஷர்மிளா தேவி, ருதுஜா பிசல் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.