கொச்சி: கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு பிறகு மும்பை வீரர் ஹர்பஜன் சிங், பஞ்சாப் வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்திருந்தார். அது அப்போது சர்ச்சையான நிலையில் அந்த வீடியோ காட்சியை தற்போது மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலில் பகிர்ந்துள்ளார் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி.
இது மனித தன்மையற்ற செயல் என ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பல்வேறு முறை ஹர்பஜன் சிங் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீசாந்தும் பலமுறை பேசியுள்ளார்.
“உங்களது சுய விளம்பரத்துக்காகவும், வியூஸ்களுக்காகவும் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை இப்போது பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் மனிதர்களே அல்ல. இது இதயமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற செயல். ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் என இருவரும் அதிலிருந்து கடந்து தங்களது சொந்த வாழ்வில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பல கடினமான சூழலை கடந்து இப்போது கண்ணியத்துடன் ஸ்ரீசாந்த் வாழ்ந்து வருகிறார். ஸ்ரீசாந்தின் மனைவி மற்றும் அவரது பிள்ளைகளுக்கு தாயான எங்கள் குடும்பத்துக்கு இந்த பழைய வீடியோவை பார்க்கும் போது மிகுந்த வேதனையளிக்கிறது. இது சம்பந்தப்பட்ட வீரர் மட்டுமல்லாது அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தையும் பாதிக்கும்” என ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி கூறியுள்ளார்.
42 வயதான ஸ்ரீசாந்த், 2005 முதல் 2011 வரையில் இந்திய அணிக்காக விளையாடியவர். சிறந்த ஸ்விங் பவுலர். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஸ்ரீசாந்த் இடம்பிடித்துள்ளார். கடந்த 2013 ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கி 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் கிரிக்கெட் விளம்பரத்துக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல், சினிமா என ரவுண்டு வந்தார்.