இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், தன் ஆதர்சமான விராட் கோலி பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் கேப்டன்சி பேட்டிங்கை தொடர் சதங்களுடன் தொடங்கியுள்ளார். இங்கிலாந்தில் இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர், கேப்டனாக அதிகபட்ச ஸ்கோர் என்று சாதனைகள் பலவற்றை அவர் நிகழ்த்தியுள்ளார்.
மாறாக டாஸ் வென்று ஹெடிங்லே போல் கனவுடன் இந்திய அணியை பேட் செய்ய அழைத்ததன் கொடுமையை இந்நேரம் பென் ஸ்டோக்ஸ் உணர்ந்திருப்பார். இன்னும் கூட இங்கிலாந்தை நெருக்கதலுக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும். இனி இது போன்ற பிட்சைப் போட்டு எதிரணியை மட்டமாக நினைத்து பாஸ்பால் போட்டு வென்று விடலாம் என்று இங்கிலாந்து கனவிலும் நினைக்கக் கூடாது என்னும் அளவுக்கு 650-700 ரன்களைக் குவித்திருக்க வேண்டும்.
இப்போது பவுலர்களை அதிக பணிச்சுமை ஏற்றி அவர்கள் காயமடைந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கு பென் ஸ்டோக்ஸ்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஒரு டெஸ்ட் போல் இன்னொரு டெஸ்ட் அமையாது என்பதை பாஸ்பால் குழு உணர வேண்டும்.
2 நாட்கள் ஆடிய களைப்புடன் பேட்டர்கள் ஒரு 20 ஒவர்களை ஆடுவது என்பது அவர்களிடம் அதிகமான சுமையை ஏற்றுவதாகும். போன போட்டியில்தான் டாஸ் வென்று பீல்டிங் எடுத்து வென்றாகி விட்டது, இந்தப் போட்டியிலாவது பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்திருக்க வேண்டும். ஏன் 4-வது இன்னிங்ஸ் சேஸிங் என்ற ஒற்றைப் பரிமாண அணியாக இங்கிலாந்து அணியை அவர் மாற்ற வேண்டும்?
5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் என்று நிலையிலிருந்து இந்திய அணி 587 ரன்களை எடுத்திருப்பதை பகுத்துப் பார்த்தால், கடைசி 5 விக்கெட்டுகளுக்கு 376 ரன்களை எடுத்துள்ளனர். இது இங்கிலாந்தில் இன்னொரு டெஸ்ட் சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷுப்மன் கில், தன் 269 ரன்கள் இன்னிங்ஸில் ஒரே ஒரு தவறைத்தான் செய்தார். அது அவுட்டில் முடிந்தது. அந்த அளவுக்கு துல்லியமான ஒரு இன்னிங்ஸை ஆடி உள்ளார் அவர்.
இங்கிலாந்து இறங்கி நிச்சயம் அடிக்கத்தான் போவார்கள் என்பது உறுதி, அதற்கேற்றாற்போல் முதல் ஓவரிலேயே ஆகாஷ் தீப் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களைக் கொடுக்க ஒருவேளை 587 ரன்களை விரைவு கதியில் எடுத்து இந்திய அணியை 2-வது இன்னிங்ஸில் சுருட்டச் செய்து சேஸ் செய்து வெல்லலாம் என்று நம் கற்பனைக் குதிரைப் பறக்க, கடைசியில் ஆகாஷ் தீப் இரண்டு அற்புத பந்துகளில் பென் டக்கெட், ஆலி போப் என இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். சிராஜ், கிராலியை வெளியேற்றினார்.
இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையில் பந்துகளை அதிகம் ஆடாமல் விட்டுவிட மாட்டார்கள். இது இந்திய பவுலர்களுக்கு ஒரு சான்ஸ். ஆனால் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை கொஞ்சம் இங்கிலாந்து பக்கம் சாய விட்டு விட்டது என்றே கூற வேண்டும். ஆஸ்திரேலிய பிட்ச்களில் பந்துகள் எகிறும் என்பதால் பேட்டரை ஆட விடுவது நல்ல உத்தி. விக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால், இங்கிலாந்தின் இது போன்ற ‘தார்ச்சாலை’ பிட்ச்களில், அதுவும் இங்கிலாந்து பந்துகளை லீவ் செய்யாது எனும் போது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைத்துக் கொள்வதுதான் நல்லது. டீப் தேர்ட்மேன், பாயிண்ட், கவர், மிட் ஆஃப் என்று வைத்துக் கொண்டு வீசுவது நல்லது.
ஆனால், நேற்று புரூக் என்ற வீரருக்கு உண்மையில் தடுப்பாட்டமே வரவில்லை. அவரிடம் டெக்னிக்கே இல்லை. அவர் எப்படி இத்தனை சதங்களை அடித்தார் என்பது ஆச்சரியமே. அவரை எல்.பி ஆக்க வீச வேண்டும் என்று பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஆகாஷ் தீப் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து இன்-ஸ்விங்கர்களை வீசியது நிச்சயம் தவறான அணுகுமுறையே. மாறாக பிரசித் கிருஷ்ணா வீசிய இரண்டு எழுச்சி ஆஃப் ஸ்டம்ப் பந்துகள்தான் புரூக்கையும் ரூட்டையும் கொஞ்சம் படுத்தி எடுத்தது.
இங்கிலாந்து பேட்டர்கள் இப்போதெல்லாம் உடலுக்குள் வரும் பந்துகளை சின்ன மட்டை நகர்வு மூலம் சமாளித்து ஆடுகின்றனர். சில வேளைகளில் அப்படி ஸ்டம்புக்கு நேராக வீசும்போது இறங்கி வந்து தூக்கி அடிக்கின்றனர். ஆகவே இந்த உத்தி செல்லுபடியாகாது. மாறாக ஆஃப் ஸ்டம்ப் லைனில் நல்ல பாதுகாப்பு வளையம் வைத்து வலை விரிக்க வேண்டும். இதை இந்திய அணி இன்று செய்ய வேண்டும். வாஷிங்டன் சுந்தரை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஃப் ஸ்டம்ப் லைனில் 4, 5-வது ஸ்டம்பில் வீச வேண்டும். இன்-ஸ்விங்கரை ஒரு ஆயுதமாக திடீரென வீச வேண்டும், ஸ்லோ பந்துகள், யார்க்கர்கள் என்று பலதரப்பட்ட பந்துகளையும் வீசி 250-300 ரன்களுக்குச் சுருட்டி ஃபாலோ ஆன் ஆட வைக்க வேண்டும். மீண்டும் இந்திய அணி பேட் செய்யக் கூடாது. அப்படி பேட் செய்யும் நிலைமை வந்தால் ட்ராவை நோக்கி டெஸ்ட்டை நகர்த்த வேண்டும்.
இங்கிலாந்து அணி நிர்வாகம் பென் ஸ்டோக்ஸ், மெக்கல்லம் ஆகியோர் இது போன்ற பிட்சை இனி போடுவதை கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது. ஆகவே இந்தப் போட்டியை அவர்களுக்கு எதிர்மறைப் பொருளில் மறக்க முடியாத போட்டியாக இந்திய அணி மாற்றி வெல்ல வேண்டும். இப்போது ஸ்டோக்ஸ் மீதுதான் கடும் பிரஷர் உள்ளது. அதை இந்திய அணி மேலும் நெருக்கி கடும் பிரஷராக மாற்ற வேண்டும்.