கிரெனடாவில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மீண்டும் டாப் ஆர்டர் கொலாப்ஸினால் 280 ரன்களுக்குச் சுருண்டது. அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். டாப் ஆர்டர் சரிவு கண்டு ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் என்று தடுமாறியது. ஆனால், கடந்தப் போட்டியில் மே.இ.தீவுகள் கோட்டை விட்டது போல் இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை நசுக்காமல் பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஆகியோரைச் சதக் கூட்டணி அமைக்கவிட்டனர். பிறகு கீழ் வரிசை பேட்டர்கள் கொஞ்சம் பங்களிக்க ஆஸ்திரேலியா 286 ரன்கள் எடுத்தது.
பார்படோஸ் டெஸ்ட் போல் அல்லாமல் சாம் கோன்ஸ்டாஸ் இந்த முறை கொஞ்சம் அவசர அவசரமாக ஆடினார். புல் ஷாட்டில் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், டெக்னிக் என்பதே சுத்தமாக இல்லாததால் ஜெய்டன் சீல்ஸ் பந்தில் தொடர்ச்சியாக பீட்டன் ஆனார். ஷமார் ஜோசப் பந்தில் எட்ஜ் பவுண்டரி அடித்தார். ஒரு அருமையான கவர் ட்ரைவ் அடித்தார்.
இவரும் கவாஜாவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் என்று நன்றாகவே தொடங்கினார். கவாஜா 16 ரன்களில் அல்சாரி ஜோசப் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தில் இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக எல்.பி.ஆனார். அடுத்த ஓவரில் ஆண்டர்சன் பிலிப் வீசிய வெளியே சென்ற பந்தை தொட்டு கேட்ச் ஆகி கோன்ஸ்டாஸ் வெளியேறினார். 25 ரன்களுக்கு கொஞ்சம் அச்சுறுத்தலாக இருந்த கோன்ஸ்டாஸ் வெளியேறினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் கை விரல்கள் காயத்தினால் முதல் டெஸ்ட்டில் பெஞ்சில் அமர்ந்த ஸ்டார் பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் இப்போது இறங்கினார். அல்சாரி ஜோசப் துல்லிய பவுன்சரை வீச அதை புல் ஷாட் ஆட முயன்று கொடியேற்றி பைன் லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலியா திடீரென 3 ரன்களில் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 என்று ஆனது.
உணவு இடைவேளை வரும் போது 90 ரன்களைக் கடந்து 3 விக்கெட்டுகள் என்றே இருந்தது ஆனால் கேமரூன் கிரீன், சீல்ஸ் வீசிய வெளியே சென்ற அவுட் ஸ்விங்கரை சேஸ் செய்து தொட்டார், கெட்டார். கேட்ச் ஆகி வெளியேறினார். உணவு இடைவேளைக்குப் பிறகு 29 ரன்களில் இருந்த டிராவிஸ் ஹெட், ஷமார் ஜோசப்பின் அட்டகாசமான எகிறு பந்தில் ஷேய் ஹோப்பிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அதன் பிறகு மே.இ.தீவுகள் அணி, ஆஸியை 150 ரன்களுக்குச் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால், பியூ வெப்ஸ்டர் 115 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுக்க அலெக்ஸ் கேரி 81 பந்துகளில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்து இருவரும் 6-வது விக்கெட்டுக்காக 112 ரன்களைச் சேர்த்து அணியை மீட்டனர்.
பாட் கம்மின்ஸ் 17 ரன்களில் தாழ்வான பந்தில் அல்சாரி ஜோசப்பிடம் பவுல்டு ஆனார். லயன் 16, ஹேசில்வுட் 10 என்று பங்களிப்பு செய்ய ஆஸ்திரேலியா 286 ரன்களுக்குச் சுருண்டது. அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகள், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர். ஷமார் ஜோசப், சீன்ஸ், ஆண்டர்சன் பிலிப் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். பியூ வெப்ஸ்டர் ரன் அவுட் ஆனார். ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்னமேயே முடித்துக் கொள்ளப்பட்டது. இன்று 2-ம் நாள் மே.இ.தீவுகள் பேட்டிங் இறங்கும்.