சபைனா பார்க்கில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளை 27 ரன்களுக்குச் சுருட்டி சாதனை வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 225 ரன்கள், மேற்கு இந்தியத் தீவுகள் 143 ரன்கள் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 204 ரன்கள் என்ற இலக்கை விரட்டியயது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இதில் ஆஸ்திரேலிய பூர்வக்குடி பவுலர் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த மிட்செல் ஸ்டார்க் முதல் 15 பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை நிகழ்த்தினார். தொடரை ஆஸ்திரேலியா முற்றிலும் வென்று 3-0 என்று கைப்பற்றியது
இதோடு தனது 400-வது டெஸ்ட் விக்கெட்டையும் கைப்பற்றினார் மிட்செல் ஸ்டார்க். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 402 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் மிட்செல் ஸ்டார்க். அதோடு இந்த இன்னிங்ஸில் 9 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சை அவர் வீசினார்.
பூர்வக்குடி ஆஸ்திரேலிய பவுலர் ஸ்காட் போலண்ட் ஜஸ்டீன் கிரீவ்ஸ், ஷமார் ஜோசப், ஜோமல் வாரிக்கன் ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
வெற்றி இலக்கான 204 ரன்களை எதிர்த்து ஆடிய மே.இ.தீவுகள் 27 ரன்களுக்குச் சுருண்டது. 1955-ம் ஆண்டில் நியூஸிலாந்து அணி ஆக்லாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக 26 ரன்களுக்குச் சுருண்ட பிறகு ஆகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோரை எடுத்து மே.இ.தீவுகள் எதிர்மறைச் சாதனை புரிந்துள்ளது. இந்த ஒரு ரன் கூடுதலாக எடுத்ததும் சாம் கோன்ஸ்டாஸ்சின் மிஸ் ஃபீல்டில் வந்ததே. இல்லையெனில் நியூஸிலாந்து குறைந்த டெஸ்ட் ரன் எண்ணிக்கையை விடவும் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆகி உலக சாதனை ஆகியிருக்கும். சமீப நினைவுகளில் இந்தியா 36 ரன்களுக்கு அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் (2020) சுருண்டது நினைவிருக்கலாம்.
மே.இ.தீவுகள் 27 ஆல் அவுட்டில் 6 வீரர்கள் டக் அவுட் ஆகினர். ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டுமே 11 ரன்கள் எடுத்து இரட்டை இலக்கத்தை எட்ட முடிந்தது. மொத்தம் 14.3 ஓவர்களே மே.இ.தீவுகள் தாக்குப் பிடித்தனர். அதாவது 87 பந்துகளே ஒரு இன்னிங்ஸ் நீடித்ததும் இன்னொரு உலக சாதனையாக ஆஸ்திரேலியா பக்கம் சென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவும் வெற்றியில் பெருமைப் பட்டாலும் இந்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறைதான் அதிகபட்சமாக 310 ரன்கள் என்று 300 ரன்களைக் கடந்து சென்றுள்ளனர். ஆஸ்திரேலிய பேட்டிங்கின் தரநிலையை மே.இ.தீவுகளும் அம்பலப்படுத்தியது என்றுதான் கூற வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸின் அனுபவமற்ற பந்து வீச்சிலேயே ஒரு தொடரில் 6 இன்னிங்ஸ்களில் ஒரு முறைதான் 300 ரன்களை ஆஸ்திரேலியா கடக்க முடிந்திருக்கிறது என்றால் ஆஸ்திரேலியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஷஸ் எச்சரிக்கை மணியை ஒலித்துக் காட்டியுள்ளது என்றே பொருள்.
இந்தத் தொடரின் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே மிட்செல் ஸ்டார்க்தான்.